இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்கள், வரலாற்றில் ஆயுதப் போரின் போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான பதிவு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வுகளாகும்.


முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்டு, நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அழிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று, இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. மனித குல வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிகழ்வான இது, இன்று 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.






வரலாறு:


மே 1945 இல் ஜெர்மனி, அலைட் நாட்டுப் படைகளிடம் சரணடைந்தது. ஆனால், ஆசியாவில் ஜப்பானுக்கும் மற்ற படைகளுக்கிடையே இரண்டாம் உலகப் போர் தொடர்ந்தது. ஜப்பானை சரணடையச் செய்ய, அமெரிக்கா மன்ஹாட்டன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தின் கீழ் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீச லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் என்று இரண்டு சக்திவாய்ந்த அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 6 1945 அன்று, அமெரிக்க விமானமான B-29 பாம்பர், லிட்டில் பாய் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசியது. அதன் உடனடி தாக்கமாக 90,000 பேர் கொல்லப்பட்டனர்.






பின்விளைவு:


ஹிரோஷிமாவின் அணுவாயுதமானது 160,000 ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை மரணத்திற்கு காரணமானது. விஞ்ஞானிகளால் கூட முழுமையாக பட்டியலிட முடியாத அளவிற்கு பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தியது. கதிர்வீச்சு காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நிரந்தரமாக கருத்தடை செய்யப்பட்டனர், கர்ப்பிணிப் பெண்களிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு,மீண்டும் கருத்தரிக்கவில்லை.


மேற்பரப்பு காயங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, முடி திடீரென உதிர ஆரம்பித்தது மற்றும் ஒரு சிறிய தீக்காயம் குணமடைய பல மாதங்கள் ஆனது. காய்ச்சல் 106F வரை சென்று, அதைத் தொடர்ந்து ஈறுகளில் இரத்தப்போக்கு, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது.


வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையானது சாதாரண அளவை விட உயர்ந்து, அது குறையும்போழுது புதிய நோயையும் கொண்டு வந்தது. 1945 ஆம் ஆண்டின் அழிவு நிகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்பட்டன.


77 ஆண்டுகள் ஆகியும் ஹிரோஷிமா நகரின் மீது நடக்கப்பட்ட தாக்குதலின் விளைவுகள் இன்றுவரை ஜப்பான் மக்களை பாதித்துக் கொண்டு வருகிறது.


ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்:


இந்த அணுகுண்டு தாக்குதல்களால் ஜப்பான் நாட்டுப் படைகள் சரணடை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறித்தது.


நாடுகளிடையே அமைதியை மேம்படுத்தவும் அணு ஆயுதங்களின் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹிரோஷிமா தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச உறவுகளில் போருக்கு எதிரான மற்றும் அணுசக்தி எதிர்ப்பு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.