இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். ஜுலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கு விளையாடி வருகின்றனர். 


காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் முதல் நாளான நேற்று களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை தந்தது. தொடர்ச்சியாக இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. அதன் படி, நேற்றைய முதல் நாளில் இந்திய அணி பெற்ற வெற்றி, தகுதி சுற்றுக்கு முன்னேறிய தருணங்களை வரிசையாக கீழே காணலாம். 


காமன் வெல்த் போட்டியில் அறிமுகமான மகளிர் கிரிக்கெட் :


பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், முதல்முறையாக பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா மகளிர் அணியை எதிர்கொண்டது. 1998 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்ற போது மட்டுமே காமன் வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.


அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஸ்ரீஹரி நடராஜன் : 


காமன்வெல்த் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 


லான் பவுல்ஸ் முடிவுகள் :


பெண்கள் ஒற்றையர் பிரிவு - பி - சுற்று 1: இந்தியாவின் டானியா சவுத்ரி 10-21 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் டீ ஹோகனிடம் தோல்வியடைந்தார்.


ஆடவர் டிரிபிள்ஸ் - பிரிவு ஏ - சுற்று 1: நியூசிலாந்திடம் 6-23 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.


ஆண்கள் டிரிபிள்ஸ் - பிரிவு A - சுற்று 2: இந்தியா 12-19 என்ற கணக்கில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது.


பெண்கள் ஒற்றையர் பிரிவு - பி - சுற்று 2: இந்தியாவின் தானியா சவுத்ரி 20-21 என்ற கணக்கில் டாப்னே ஆர்தர்-ஆல்மண்டிடம் தோல்வியடைந்தார்.


மகளிர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் :


இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் டென்னிசன் மற்றும் அகுலா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கம் முதல் ஆதிக்கத்தை செலுத்தி வந்த டென்னிசனும், அகுலாவும் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் எட்வர்ட்ஸ் மற்றும் படேலை 3-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினர்.


ஆண்கள் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் :


இரட்டையர் பிரிவில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் தேசாய் மற்றும் ஞானசேகரன் பார்படாசின் பார்லி மற்றும் நைட்டை 3-0 என்ற கணக்கில் அசத்தலாக வென்றனர். 


ஒற்றையர் பிரிவு :


இரண்டாவது ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, தென்னாப்பிரிக்காவின் கலாமுமை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


கிரிக்கெட் போட்டி :


காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது வெற்றியை பதிவு செய்தது.


மகளிர் ஹாக்கி :


காமன்வெல்த் போட்டித்தொடரின் முதல் போட்டியில் கானா அணியை 5-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி எளிதாக வென்றது.


குத்துச்சண்டை :


லைட் வெல்டர் வெயிட்டின் 63.5 கிலோ எடைப்பிரிவில் பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் 28 வயதான இந்திய வீரர் ஷிவா தாபா வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


காமன்வெல்த் கேம்ஸ் பேட்மிண்டன் போட்டி :


இந்திய அணி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தாஸ் அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. 


டேபிள் டென்னிஸ் - காலிறுதியில் இந்தியா :


சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி, நடப்பு சாம்பியனான இந்தியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.


ஸ்குவாஷ் - அபய் சிங் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :


23 வயதான அபய் சிங், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 11-5, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் ஜோ சாப்மேனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


ஸ்ரீஹரி நடராஜ் இறுதி போட்டிக்கு தகுதி :


இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இரண்டாவது அரையிறுதியில் 54.55 வினாடிகளில் கடந்து 4வது இடத்தைப் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண