கோலிவுட்டின் ’ஓல்ட் இஸ் கோல்ட்’ ஜோடிகளாகக் கருதப்படுபவர்கள் நடிகர் ரோஜா மற்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தம்பதியினர்.செல்வமணியின் செம்பருத்தி, அதிரடிப்படை உள்ளிட்ட படங்களில் நடித்த ரோஜா..பிறகு அடுத்தடுத்த காலகட்டங்களில் இருவரும் காதல் வயப்படவே 2002ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் நடந்தது என்னவோ அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில். 



தங்களது காதல் திருமணம், அதற்கு ஜெயலலிதாவை அழைக்கச் சென்றது, அவர் திருமணத்துக்கு வந்தது..என சுவாரசியமான சில தகவல்களை அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டனர் இந்த ஜோடி.





அவர்கள் அளித்த பேட்டியில் இருந்து..”நான் ஜெயலலிதாவுக்கு எதிராகவே நிறைய திரைப்படங்கள் செய்திருக்கிறேன்.எங்கள் குடும்பம் எங்கள் நண்பர்கள் எல்லோருமே கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர்கள். இயல்பாகவே ஜெயலலிதாவின் மீதான எதிர்ப்பு மனப்பான்மை என்னிடம் இருந்தது.ஆனால் ரோஜாவை நல்லபடியாக அரவணைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவர்தான் திருமணத்துக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ரோஜா. அதனால் என்னால் மறுக்க முடியவில்லை. நண்பர்கள் எல்லோரும் கிண்டல் செய்தார்கள்,”காதலுக்காக என்னவெல்லாம் செய்யற பாரு” என்று சிரித்தார்கள். நான் ரோஜாவிடம் சொன்னதெல்லாம் ஒன்றுதான். போய் அழைப்போம் அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்தால் ஓகே. இல்லையென்றால் வற்புறுத்த வேண்டாம். என்றேன்.


எனக்கு அவரைப் பிடிக்காதுதான் ஆனால் அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அவர் கிணற்றில் குதிக்கச் சொன்னால் கூட குதிக்கத் தயாராக இருந்தேன்.அவரை ‘அம்மா’ என சொல்வதில் தவறே இல்லை. அன்பின் மொத்த உருவம் அவர். எங்கள் திருமணத்துக்கு வந்திருந்து என்னிடம் 15 நிமிடங்கள் பேசினார். ‘உங்களுக்கு என்னை பிடிக்காது தெரியும். ஆனால் ரோஜா என் மகள் மாதிரி.உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காதலித்த பெண்ணை கைவிடாமல் திருமணம் செய்துகொண்டுள்ளீர்கள்.திருமணத்தில் பிரச்னைகள் வரும். ஆனால் எந்த காரணம் கொண்டும் குடும்பத்திலிருந்து வெளியேறாதீர்கள். அதில் இருந்தபடியே அதற்கான தீர்வைக் காணுங்கள்” என்றார். அவரைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீடும் அந்த நிமிடம் வேறாக மாறியிருந்தது” என்கிறார் செல்வமணி.