கடந்த சில நாட்களாக பத்திரிகை செய்திகளில் பேசு பொருளாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய சிறப்பான புட்பால் மூவ் மூலம் வைரலாகும் ரொனால்டோ, இந்த முறை கோகோ கோலா மூவ் மூலம் வைரலானார்.
ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையில் ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தை தொடங்கியது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி புடாபெஸ்டில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு வந்து அமர்ந்தபோது, கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் ரொனால்டோ முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதை கண்ட ரொனால்டோ அவற்றை எடுத்து மேஜையின் ஓரத்தில் கேமராவில் தெரியாத வண்ணம் வைத்தார். மேலும் அதற்கு பதிலாக ஒரு தண்ணீர் பாட்டிலை அனைவர் முன்னிலையிலும் தூக்கி காண்பித்து ‘தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.
இந்த வீடியோ நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் வைரலானது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் ஒருவர் கோகோ கோலாவை தூக்கி ஓரம் வைத்தது சாதாரண நிகழ்வல்ல. அதன் எதிரொலியாக அந்நிறுவனம் ரூ.29,337 கோடி இழப்பை சந்தித்தது.
ரொனால்டோவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். உடல் ஆரோக்கியத்தில் ஒரு பெரிய விளையாட்டு வீரரின் சின்ன அறிவுரை கூட பல கோடிக்கணக்கான ரசிகர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என ஹார்ட் விடுகின்றனர் ரசிகர்கள். அதேவேளையில் ரொனோல்டோ ஆரம்ப காலங்களில் நடித்த சில விளம்பரங்களை தோண்டி எடுத்து கலாய்க்கத் தொடங்கியுள்ளனர் இன்னொரு தரப்பினர். கையில் கோக் டின்னுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் ரொனால்டோவின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு இதெல்லாம் என்ன கதை என கேள்வி எழுப்பியுள்ளனர் இணையவாசிகள்.
ஜெர்மனியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற புட்பால் உலகக்கோப்பையின் போது எடுக்கப்பட்ட கோக் விளம்பரமும் இப்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிலர் கேஎப்சி விளம்பரத்தை கையில் எடுத்துள்ளனர். ஆரோக்கியமான உணவை பரிந்துரைக்கிறரா ரொனால்டோ? எப்போது ஏன் கேஎப்சி சிக்கனை சாப்பிட்டு பெனால்டி ஷாட் அடிக்கிறார் என ரொனால்டோ நடித்த கேஎப்சி விளம்பரத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த விளம்பரம் 2013ல் எடுக்கப்பட்டது.
இந்த கேலி, கிண்டலுக்கெல்லாம் பதிலளித்துள்ள ரொனால்டோவின் ரசிகர்கள் தன்னுடைய தொடக்கக் காலத்தில் ரொனால்டோ நடித்த சில விளம்பரங்களை இப்போது ஒப்பிடுவது எப்படி சரியாகும்? சிறு வயதுதில் நாமெல்லாம் சரியானதை புரிந்துகொண்டுதான் இருக்கிறோமா? சில விஷயங்கள் புரிய குறிப்பிட்ட வயது வேண்டி இருக்கிறது. இப்போது ரொனால்டோ எது பக்கம் நிற்கிறார் என்பதை மட்டுமே பாருங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !