கடந்த சில நாட்களாக பத்திரிகை செய்திகளில் பேசு பொருளாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் ரொனால்டோ அவ்வப்போது களத்திற்கு வெளியேவும் தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் நம்மை வியக்க வைத்து வருகிறார். அப்படி அவர் செய்த சில டாப் தருணங்கள் என்னென்ன?


 


இரத்த தானம்: 




தன்னுடைய சம கால கால்பந்து வீரர்களிடம் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சற்று மாறுபட்டவர். ஏனென்றால், தற்போது  இருக்கும் பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய உடம்பில் டாட்டூக்கள் குத்தி கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் ரொனால்டோ தன்னுடைய உடம்பில் டாட்டூ எதுவும் குத்தவில்லை. அத்துடன் அவர் இரத்த தானம் செய்வதை வாடிக்கையாகவும் வைத்துள்ளார். 


அவர் இரத்த தானம் செய்வதற்கு முக்கிய காரணம் அவருடைய சக வீரர் கார்லோஸ் மார்ட்டின் தான். மார்டினின் மகனுக்கு இரத்தம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இதை கேட்டறிந்த உடன் ரொனால்டோ எப்போதும் இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். அதற்கு ஏற்ப சரியாக போர்ச்சுகலில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதற்காக தன்னுடைய உடம்பில் டாட்டூ குத்தாமலும் இருந்து வருகிறார். 


 


மேலாளருக்கு தீவு பரிசு:




உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுக்கு மேலாளராக இருக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அப்படி ரொனால்டோவின் மேலாளராக மெண்டிஸ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களை பழகி வருகின்றனர். அந்த அன்பின் வெளிப்பாடாக மெண்டிஸின் திருமணத்திற்கு கிரேக்க தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ரொனால்டோ பரிசாக அளித்தார். அவரின் இந்த செயலை பலரையும் வியக்க வைத்தது. மேலும் இது அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பந்தத்தை வெளிகாட்டும் வகையில் அமைந்தது. 


 


லா டெசிமா வாட்ச் பரிசு:




2014ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி அட்லெடிகோ டி மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி 10ஆவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. அப்போது தன்னுடய சக ரியல் மாட்ரிட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் ஒரு லா டெசிமா வாட்ச் ஒன்றை பரிசாக ரொனால்டோ வழங்கினார். 


அதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த வாட்சிற்கு பின்னால் ஒவ்வொரு வீரரின் பெயரும் உடன் பொறிக்கப்பட்டிருந்தது. ஒரு லா டெசிமா வாட்சின் விலை கிட்டதட்ட 8200 யூராவாக இருந்தது. அவரின் இந்தச் செயல் சக வீரர்களை பெரும் மகிழ்ச்சி அடைய வைத்தது. 


அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு:




கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் நபராக இருந்து வந்தார். தன்னுடைய சிறுவயது முதல் அவர் பல போராட்டங்களை தாண்டி கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்தது அவருடைய தாய் தான். தனது தாய் அளித்த ஊக்கத்தை அவர் எப்போதும் மறந்ததில்லை. அதன் வெளிப்பாடாக கடந்த 2015ஆம் ஆண்டு தனது தாயின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த போர்ஷ் கார் ஒன்றை பரிசாக அளித்தார். அதன்பின்னர் அடுத்த பிறந்தநாளுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இதை அவருடைய தாய் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 


 


சில்வர் ஷூவை நானிக்கு வழங்கியது:





2016ஆம் ஆண்டு யுரோ கோப்பை கால்பந்து தொடரை போர்ச்சுகல் அணி பிரான்சு அணியை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே ரொனால்டோ வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தன்னுடைய கேப்டன் பொறுப்பை சக வீரர் நானியிடம் கொடுத்து விட்டு சென்றார். போர்ச்சுகல் வென்ற பின்பு அந்தத் தொடரில் இரண்டாவது அதிகமாக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் சில்வர் ஷூ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டது. அடுத்த நாள் இந்த ஷூவை முதல் முறையாக போர்ச்சுகல் அணியை வெல்ல வழிநடத்திய தன்னுடைய சக வீரர் நானிக்கு ரொனால்டோ பரிசாக வழங்கினார். இதை நானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “ரொனால்டோ களத்தில் மட்டும் எங்களுக்கு கேப்டன் அல்ல களத்திற்கு வெளியேவும் அவர் தான் எங்களுக்கு கேப்டன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். 


இவ்வாறு பல நெகிழ்ச்சியான தருணங்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்திற்கு வெளியே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!