டிவியில் தான் பதஞ்சலி விளம்பரத்தில் அவ்வப்போது வந்துபோகிறார் என்றால் அன்றாடம் இவரைப் பற்றிய செய்தியும் நம்மை வந்துசேராமல் இருக்காதுபோல. அந்த அளவுக்கு பாபா ராம்தேவும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதவை. யோகா குருவைப் பற்றிய அண்மைச் செய்தி இதோ..




இந்திய மருத்துவக் கழகத்தின் சத்தீஷ்கர் மாநிலப் பிரிவு சார்பில் ராமகிருஷ்ண யாதவ் என்ற யோகா குரு பாபா ராம்தேவ் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு சிகிச்சைகளுக்கு எதிராக தொடர்ந்து யோகா குரு ராம்தேவ் அவதூறுத் தகவல்களைப் பரப்பிவருவதாகக் கூறி இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவர் மீது சட்டப்பிரிவுகள் 188 (பொதுப் பணியாளரின் ஆணைகளுக்கு ஒத்துழையாமை) சட்டப்பிரிவு 269 (உயிருக்கு ஆபத்தான ஏதாவதொரு நோயைத் தொற்றுதலால் அநேகமாக பரப்பும் என்றிருக்கிற மற்றும் அவருக்கு தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கிற சட்டத்துக்குப் புறம்பான அல்லது கவனக்குறைவான ஏதாவதொரு செயலைச் செய்தல்) சட்டப்பிரிவு 504 ( பொது அமைதிக்கு வேண்டுமென்றே குந்தகம் விளைவித்தல்) தவிர பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.




நாக்குக்கு யோகா இருக்கா பாஸ்?
யோகா குரு ராம்தேவ் ஊருக்கே யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஆனால், அவரது நாவைக் கட்டுப்படுத்தவும் ஏதாவது யோகா இருந்தால் அதைப் பழகலாம் என்று அண்மையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் வினவியிருந்தார். அந்த அளவுக்கு அவர் நாவடக்கமில்லாமல் பேசிய பேச்சுக்கள் வண்டியாக வண்டியாக சர்ச்சையாகி நிற்கின்றன. ஒரு சேம்பிள் சொல்றோம் கேளுங்க.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், "அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல் என்றும் லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டும் அவை கொரோனா நோயாளிகளைக் காக்கவில்லை" எனப் பேசினார்.
இது நாடு முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 730 மருத்துவர்கள் இறந்துள்ளனர். உயிரைப் பணையம் வைத்து மருத்துவர்கள் சேவை செய்ய, அதை கொச்சைப்படுத்துவதுபோல் பேசினார் பாபா ராம்தேவ்.
மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படவே, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனே இதில் தலையிட்டார். "சின்னம்மை, போலியோ, எபோலா, சார்ஸ், காசநோய் போன்ற நோய்களைக் கணித்து, அதற்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியது அலோபதி மருத்துவம்தான். இப்போது, கொரோனாவுக்கு எதிரான போரிலும் தடுப்பூசி முக்கியமான ஆயுதம், அதை வழங்கியதும் அலோபதி மருத்துவம்தான்.மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும். நாட்டில் நிலவும்சூழல், நிலை ஆகியவற்றை உணர்ந்து கருத்துக்களை நீங்கள் பேசியிருக்க வேண்டும்" என ஒரு குட்டுவைத்தார்.
அய்யோ என ஆடிப்போன மனிதர் தனது மொத்த வித்தையையும் இறக்கி ஒரு அந்தர்பல்டி அடித்தார். மன்னிப்பும் கோரினார்.




அண்மையில், ஹரித்வாரில் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்த பாபா ராம்தேவ், "அனைவருமே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளுங்கள். யோகா, ஆயுர்வேதத்தையும் பின்பற்றுங்கள். அப்படிச் செய்தால் கொரோனாவுக்கு எதிராக இரட்டை அரணைப் பெறுவீர்கள். நானும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்போகிறேன். அலோபதி மருத்துவர்கள் பூமியில் உள்ள இறைதூதர்கள். நான் எந்த ஒரு அமைப்பின் மீதும் விரோதம் பாராட்டவில்லை. நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிறவியிலேயே நல்லவர்கள். ஆனால், ஒருசில மருத்துவர்கள் தவறும் செய்கின்றனர். அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் அலோபதி மருத்துவம்தான் சிறந்தது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை" என்று பேசினார். 

இதற்கிடையில்தான், இந்திய மருத்துவக் கழகத்தின் சத்தீஷ்கர் மாநிலப் பிரிவு சார்பில் ராமகிருஷ்ண யாதவ் என்ற யோகா குரு பாபா ராம்தேவ் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.