உலகளவில் சமீபகாலமாக இளைஞர்கள், சிறுவர்கள் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


மைதானத்திலே சுருண்டு விழுந்த வீரர்:


இந்த நிலையில், சீன பேட்மிண்டன் வீரர் ஒருவருக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பிரபலமான விளையாட்டுகளில் பேட்மிண்டன் விளையாட்டும் ஒன்றாகும். இந்தோனேஷியாவில் உள்ள யோக்யாகர்தா நகரில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சீனாவைச் சேர்ந்த 17 வயதான ஷாங்க் ஜீஜீ-என்ற பதின்ம வயது இளைஞர் பங்கேற்றார்.


இவருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கசுமா கவானோவிற்கும் இடையே கடந்த 30ம் தேதி போட்டி நடைபெற்றது. 11- 11 என்ற சமநிலையில் இருவரும் விறுவிறுப்பாக இருந்தபோது திடீரென சீன பேட்மிண்டன் வீரர் ஜாங்க் மைதானத்திலே கீழே சுருண்டு விழுந்தார். இதனால், அவரை எதிர்த்து ஆடிய வீரர், போட்டி நடுவர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


பரிதாப மரணம்:


உடனடியாக, மைதானத்தில் இருந்த மருத்துவ சிகிச்சைக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது. அதன்பின்பு, அவரை மருத்துவ குழு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பேட்மிண்டன் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் போட்டியின்போது மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு  இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஜாங்க் கடந்தாண்டுதான் சீனாவின் தேசிய அணிக்காக விளையாடத் தொடங்கினார். ஜாங்க் இந்தாண்டு தொடக்கத்தில் டட்ச் ஜூனியர் சர்வதேச பட்டத்தை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்திற்கு கார்டியாக் அரெஸ்ட் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் அவர் சுருண்டு விழுந்து கை, கால்கள் நடுங்க துடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் கிரிக்கெட் மைதானத்திலும், உடற்பயிற்சி கூடத்திலும் உயிரிழந்த சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?


மேலும் படிக்க:ICC T20 WC Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணி.. ரோஹித், பாண்டியாவிற்கு இடம்.. கோலிக்கு இடமில்லை!