சின்னத்திரை நடிகர்களுக்கு இன்று மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால் அதற்கு ஏராளமான போட்டியும் உள்ளது. நல்ல ஒரு வாய்ப்பை பெறுவது அவ்வளவு ஒரு எளிதான விஷயமல்ல. எத்தனையோ நடிகர் நடிகைகளுக்கு எக்கச்சக்கமான திறமைகள் இருந்தும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காதல் நிரூபிக்க முடியாமல் போவதோடு சில சமயங்களில் சின்னத்திரையை விட்டு காணாமல் போகவும் செய்கிறார்கள். அப்படி அந்த தடைகள் அனைத்தையும் கடந்து வெற்றி நடை போடுபவர்கள் ஒரு சிலர் தான். அதில் ஒருவர் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கடைசி மருமகள் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா. 




திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் விஜே தீபிகா. சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் பார்ட் டைமாக நடிக்க வாய்ப்புகளுக்காக தேடி அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கேரியரை அமைத்து கொண்டார். தனியாக அவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல் ஜோடிகளான கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 


சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜே தீபிகா பேசிய சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டில் மூணு பெண் பிள்ளைகள், அம்மாவையும் சேர்த்து நாங்கள் நாலு பேர் எங்களுடைய வீட்டில் பெண்கள். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருத்தருக்கு  பீரியட்ஸ் வந்துவிடும். அந்த சமயங்களில் அவர்களை பூஜை, பண்டிகை நாட்களில் கலந்து கொள்ள விடாமல் தனியாக ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இந்த வழக்கத்தை என்னுடைய அப்பா தான் உடைத்து எறிந்தார். 


என்னுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படையல் பூஜை எல்லாம் செய்கிறேன். அவர்கள் உடலில் ஏதோ சிறு பிரச்சினை என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்னால் சாமி கும்பிட முடியாது என பீரியட்ஸ் நேரத்திலும் எங்களை அழைத்து சாமி கும்பிட வைப்பார்.


அதுவே எங்களுக்கு பழக்கமாக மாறிவிட்டது. நான் எல்லா நாளும் நான் வெஜ் சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டு கோயிலுக்கு போவேன், பீரியட்ஸ் இருந்தாலும் நான் கோயிலுக்கு போவேன், சாமி கும்பிடுவேன். பூஜை ரூம்ல போய் சாமி கும்பிடுவேன். அவர் என்னுடைய அய்யனாரு. எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அவர் பார்த்துப்பார். அவர் என்னை ஒதுக்க மாட்டார்.  அவரை எனக்கு தெரியும். நீங்க யார் அதை சொல்றதுக்கு. நான் வெளியே போகும்போது குங்குமம் வைக்கணும் சந்தனம் வைக்கணும் என்றால் நானே சாமி ரூமுக்கு போய் வைத்துக்கொள்வேன். எனக்கு அங்க உட்கார்ந்து அழணும் என தோணுச்சுனா உட்கார்ந்து அழுவேன்.


எந்த டேட்ல போகணும் போகக்கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்க" என மிகவும் துணிச்சலாக பேசி இருந்தார் விஜே தீபிகா. அவரின் இந்த கருத்தை பலரும் பார்ட்டி வந்தாலும் ஒரு சிலர் தேவையற்ற விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.