விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பூத்துறை சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனை செய்தனர். சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் ஆரோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் 




 


மூன்று பேரும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மேட்டு தெருவை சேர்ந்த விஜயன் மகன் கிருஷ்ண குமார் (24), ரஹ்மதுல்லா மகன் முகமது ரஜீதீன் (20), உருளையன்பேட்டை பாவேந்தர் தெருவை சேர்ந்த கென்னட் மகன் வெற்றி (28) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள சுங்கவரி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த சாந்தப்பன், அவரது நண்பரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது அவரை பெரம்பை பகுதியில் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்ததும் தெரியவந்தது.





மேலும் விசாரணையில் கிருஷ்ண குமார் உள்ளிட்ட 3 பேரும் இது போன்று பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ண குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வானூர் நீதிமன்றதில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளை :-


தமிழகத்தின் வடபகுதியின் முக்கிய நகரமாக விழுப்புரம் உள்ளது. இந்த வழியாகத்தான் தென் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சென்னைக்கு செல்கின்றன. எனவே விழுப்புரத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகம் காணப்படும். இவ்வாறு செல்லும் வாகனங்களை கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து பணம் பறித்து வருகிறார்கள். இது போன்ற சம்பவம் விழுப்புரத்தில் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் காணப்படுகின்றனர். இது இவ்வாறு இருக்க விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம், மயிலம், ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணிமுடிந்து இரவு நேரம் வீடு திரும்புகின்றனர்.


 




 


இவர்களை குறிவைத்து அடையாளம் நபர்கள் பணத்தை பறித்து வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் வழிப்பறிகளால் டாஸ்மாக் ஊழியர்கள் இரவு நேரத்தில் செல்வதற்கு பயப்படுகின்றனர். மேலும் கொள்ளையர்கள் கிராம பகுதிகளை நோட்டமிடுகின்றனர். பொதுவாக கிராமத்தில் உள்ள விவசாயிகள், 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் வீட்டு சாவியினை வெளி பகுதியில் வைத்து செல்வார்கள். இதனை பகல் நேரத்தில் கண்காணிக்கும் அடையாளம் தெரியாத கும்பல் அந்த சாவியினை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். பின்னர் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். இதுபோன்று தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி ஆகியவை நடந்து வருவதால் விழுப்புரம் நகர் மற்றும் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.