புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் சார்பில் முதல் பட்ஜெட்டை நேற்று மாலை அம்மாநில முதல்வர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் கோழிப் பண்ணைகள் அமைக்க இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடைத் துறையில் உள்ள திறன்மிக்கவர்களின் (Experts) மூலம் இணைந்து தொழில்நுட்பதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நபார்டு (NABARD) மூலம் கடனுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறியுள்ளார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலம் :
இவ்வாட்சிப்பரப்பில் கால்நடை மற்றும் கோழிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு கால்நடைகளின் நலனைப் பேணுதல், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும்.
கறவை பசுக்கள் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சிறந்த மரபணுக்கள் கொண்ட கலப்பின கிடேரிக் கன்றுகளை உருவாக்க 70,000 செயற்கை முறை கருவூட்டல்கள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 20,000 சிறந்த மரபணுக்கள் கொண்ட கன்றுகளை 2021-22ஆம் ஆண்டில் நாம் பெற இயலும். மேலும், "இன்றைய கன்று நாளைய பசு” என்ற கருத்தின் அடிப்படையில் விவசாயிகளை கிடேரிக் கன்றுகளை வளர்க்க ஊக்குவிக்கும் பொருட்டு கன்று ஊர்வலங்கள் (Calf Rallies) அந்தந்த கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடைக் கிளை நிலையங்கள் மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமான கிடேரிக் கன்றுகளை வளர்ப்போருக்கு பணப்பரிசுகள் வழங்கப்படும்.
சிறந்த மரபணு கொண்ட கலப்பின கிடேரிக் கன்றுகளை உருவாக்க குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரம (தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம்) கோசாலையிலிருந்து உறை விந்து வாங்கப்பட்டுள்ளது. சாஹிவால் (உள்நாட்டு இனம்) விந்து இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் ஆடுகளை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க, சிறந்த மலபார் ஆடுகளின் விந்து செயற்கைக் கருவூட்டல் செய்வதற்காக கால்நடைக் கிளை நிலையங்களுக்கு வழங்கப்படும். புறக்கடைக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும்பொருட்டு, இருவித பயன்பாடுகள் கொண்ட 1,000 கிரிராஜா கோழிகள் அரசு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு 50 விழுக்காடு மானியத்தில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். கறவை மாடுகள் மற்றும் கலப்பினக் கன்றுகளை பராமரிக்கும் செலவினை குறைக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களில் உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் கால்நடைத் தீவனம் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
சிறப்புக் கால்நடை மற்றும் இனப்பெருக்க (SLBP) திட்டத்தின்கீழ் புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் அடுத்த தலைமுறை கறவைப் பசுக்களை உருவாக்குவதற்காக, கலப்பின கிடேரிக் கன்றுகளுக்கு 75 விழுக்காடு மானிய விலையில் சமச்சீர் கலவை கன்றுத் தீவனம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆட்சிப்பரப்பு பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு எனது அரசு பின்வரும் திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்துள்ளது.
1. ஆர்வமுள்ள பொதுப்பிரிவு மற்றும் அட்டவணைப் பிரிவு பயனாளிகளுக்கு முறையே 25 மற்றும் 33 விழுக்காடு மானியத்தில் 4,000 கறவைப் பசுக்கள் வழங்கப்படும்;
2. கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பகுதி வாரியான தாது உப்புக் கலவை (Area Specific Mineral Mixture) அனைத்து கறவைப் பசுக்களுக்கும் வழங்கப்படும்;
3. காமதேனு பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 12 லிட்டர் மற்றும் அதற்குமேல் பால் தரக்கூடிய உயர்ரக கறவைப்பசுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ரக கிடேரிக் கன்றுகள் உருவாக்கப்படும்,
4. பால் உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிக்க பெண் கன்றுகளை மட்டுமே உருவாக்கும் பொருட்டு “இனம் பிரிக்கப்பட்ட உறைவிந்து தொழில் நுட்பம்" அறிமுகப்படுத்தப்படும்;
5. ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு, வெள்ளாடு / செம்மறி ஆடு மற்றும் கோழிப் பண்ணைகள் அமைக்க இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடைத் துறையில் உள்ள திறன்மிக்கவர்களின் (Experts) மூலம் இணைந்து தொழில்நுட்பதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நபார்டு (NABARD) மூலம் கடனுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
6. நடமாடும் கால்நடை மருந்தகங்களை செயல்படுத்துவதற்காக, புதுச்சேரி பிராந்தியத்திற்கு இரண்டு மற்றும் காரைக்கால் பிராந்தியத்திற்கு ஒன்று என மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் பால் உற்பத்தியானது தற்போதுள்ள 1,22,000 லிட்டரிலிருந்து 1,75,600 லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இத்துறைக்காக ₹ 44.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.