சென்னை அடுத்த மாமல்லபுரத்தில்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு செஸ் போட்டி விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக போர் நடத்தி வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறின. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வருடம் ஆகிவிட்டது.

 



 

இந்நிலையில் அங்கு தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வந்த பொழுது, மூவர்ண கொடிகளையே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆப்கானிஸ்தானில் அரசு படை வீழ்ச்சி அடைந்து பிறகு தாலிபான்கள், தங்களது கொடியை ஆப்கானிஸ்தான் நாட்டின் கொடியாக  அறிவித்தனர். இருந்தும் பல சர்வதேச அரங்குகளில் ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.



 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கூட கருப்பு,  சிவப்பு, பச்சை வண்ண  கொண்ட கொடியை தான்  பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்களின்  கொடி வைக்கப்பட்டிருப்பது பேசுபொருள் ஆகி உள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தான் செஸ் விளையாடும் வீரர்கள் அரங்கிற்குள்ளே, ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாடு பயன்படுத்தி வந்த மூவர்ண கொடியை பயன்படுத்தி வருகின்றது.

 



 

வீரர்களின் நேம் போர்டு வைக்கப்படும் இடத்தில், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆப்கானிஸ்தானின் பழைய மூவர்ணக் கொடி பயன்படுத்தப்படுகிறது. அரங்கிற்குள் ஆப்கானிஸ்தானின் பழைய கொடியை அங்கீகரிக்கப்பட்ட கொடியாக உள்ளது. இந்நிலையில்தான் தாலிப்பான்கள் கொடியுடன், ஆப்கானிஸ்தான்  நாட்டு வீரர் ஒருவர், அரங்கிற்கு வெளியே நிற்கும் புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி  வருகிறது.



 

இதேபோல போட்டி நடைபெறும் அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள, பேனரில் அனைத்து நாட்டு கொடிகளில் தாலிபான்களின் கொடி பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் தாலிபான் ஆதரவாளர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. இந்திய அரசு தாலிபான் அரசை நேரடியாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் , மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.