மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் நேருக்கு நேர் மோதின. ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனிக்கு ஐ.பி.எல்.லில் இது 200வது போட்டி என்பதால் அவரது ரசிகர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.




இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தோனியின் முடிவு ஒருபோதும் தவறாகாது என்பது போலவே, பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் அமைந்தது. கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய அந்த அணி கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.




ஆனால், 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கே.எல்.ராகுலை ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்தார். மயங்க் அகர்வாலை 0 ரன்னிலும், அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலை 10 ரன்னிலும், கடந்த ஆட்டத்தில் காட்டடி அடித்த தீபக் ஹூடாவை 10 ரன்னிலும், அதிரடி மன்னன் பூரனை 0 ரன்னிலும் தீபக் சாஹர் வெளியேற்றினார். இதனால், பஞ்சாப் அணி 7 ஓவர்களில் வெறும் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.




பஞ்சாப் அணியின் விளையாட்டை பார்த்தபோது 50 ரன்களையாவது கடக்குமா? என்ற பரிதாபமாக இருந்நதது. அப்போது,பஞ்சாபின் மானத்தை காப்பாற்றுவதற்காக தமிழக வீரர் ஷாரூக்கான் களமிறங்கினார். இறங்கியது முதல் அதிரடியை கையில் எடுத்த ஷாரூக்கான் பவுண்டரி, சிக்ஸர் என்று விளாசினார்.


அவருடன் இணைந்து விளையாடிய ரிச்சர்ட்ஸன் 22 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் இறங்கிய முருகன் அஸ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தனியாளாக போராடிய ஷாரூக்கான் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 47 ரன்களை குவித்து 8வது விக்கெட்டாக வெளியேறினார்.  இறுதியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை குவித்தது.


ஒரு கட்டத்தில் 50 ரன்களை தொடுமா என்று காத்திருந்த பஞ்சாபின் மானத்தை தமிழன் ஷாரூக்கான் தனது அதிரடியால் சத ரன்களை எடுக்கவைத்து காப்பாற்றினார்.சென்னை அணியில் தீபக் சாஹர் 4 ஓவர்கள் பந்துவீசி 4 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ருது ராஜ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டுபிளசிஸ் 36 ரன்கள் சேர்க்க ,மறுபுறம் அதிரடி காட்டிய மொயின் அலி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 8, அம்பாதி ராய்டு டக் அவுட் ஆக சுட்டிக்குழந்தை சாம்கரன் தன் பங்கிற்கு 5 ரன்கள் எடுக்க, ஆட்டமிழக்காமல் இருந்த டுபிளசிஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி, 15.4 ஓவரில் இலக்கை எட்டி  வெற்றி பெற்றது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.