இன்று மும்பையில் நடைபெறும் IPL போட்டிகளில் தொடக்கத்திலேயே 5 விக்கெட்களை இழந்து பஞ்சாப் அணி தவித்து வருகின்றது. 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்யுமாறு பஞ்சாப் அணியை அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் (கேப்டன்) மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் வெறும் 7 பந்துகள் ஆடிய நிலையில் ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ராகுல். அவரை தொடர்ந்து கிறிஸ் கெய்ல் களமிறங்கினார்.
கேப்டன் அவுட்டான சில நிமிடங்களில் மயங்க் அகர்வால் இரண்டு பந்துகள் ஆடிய நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த இந்த நிலையில் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லும் 2 பௌண்டரிகள் விளாசிய நிலையில் 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களை தற்போது சோகத்தின் உச்சிக்கே கொண்டுசென்றுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் தொடர்ந்து ஆடிய தீபக் ஹூடா 15 ரங்களிலும், நிக்கோலஸ் பூரான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தற்போது களத்தில் ஷாருக்கான் மற்றும் ரிச்சர்ட்சன் நிதானமாக ஆடிவருகின்றனர். பஞ்சாப் அணி 11 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றது.