தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்கள், அண்ணாமலையுடன் கருத்து மோதல், பொதுக்குழு வழக்கு போன்ற பல சிக்கல்களை அடுத்தடுத்து எதிர்கொண்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அமித்ஷா தமிழ்நாடு வந்து சென்றுள்ள நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மீண்டும் எம்.பி. தொகுதிகளை தக்க வைக்கவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறவும் முனைப்பு காட்டி வருகின்றன.


அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது கூட்டணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்து அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்களவைத் தேர்தல், அண்ணாமலை:


இந்த சூழலில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி, அண்ணாமலையின் கருத்து ஆகியன குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. 25 இடங்களை வெல்வதே இலக்கு என்று அமித்ஷா கூறியது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


கூட்டணியில் தங்கள் தலைமையின் கீழ் உள்ள கட்சியின் தேசிய தலைவர் இவ்வாறு கூறியதற்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விவகாரம் குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் – தினகரன்- சசிகலா குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 


தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், தற்போது நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   


மேலும் படிக்க: TTV Dinakaran: 'வாய்க்கு வந்ததை பேசக்கூடாது; தலைவர் பதவிக்கு தகுதியானவரா அண்ணாமலை?"- விளாசிய டிடிவி தினகரன்..!


மேலும் படிக்க: OPS on Annamalai: ’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..?’ அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்த ஓ.பி.எஸ்..!