உலக கிரிக்கெட் வரலாற்றில் மின்வெட்டு பிரச்சனை காரணமாக டிஆர்எஸ் முறை ரத்தானது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. சென்னை அணி ப்ளே ஆஃபுக்கு போகும் வாய்ப்பு நூழிலை அளவில் இருந்த நிலையில் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த போட்டியில் கடைசி பந்தில் பறிகொடுத்த வெற்றிக்கு பழி தீர்க்க காத்திருந்தது மும்பை அணி. ஆனால், மும்பை அணியை விட சென்னை ரசிகர்களின் கனவோடு விளையாக காத்திருந்தது டிஆர்எஸ். டிஆர்எஸ் முறை அவுட் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது அவுட்டாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலோ டிஆர்எஸ்  முறையைப் பயன்படுத்தி 3வது அம்பயர் மூலம் ரிவியூவுக்குப் போகலாம். நேற்றையப் போட்டியின் முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். அவர் இரண்டாவது பந்தை வீசிய போது அது கான்வேவின் லெக் பேடில் பட்டது. டேனியல் சாம்ஸ் விக்கெட் கேட்கவே அம்பயர் சிர்ரா ரவிகாந்த் ரெட்டி அவுட் கொடுத்தார். விக்கெட்டில் சந்தேகம் இருந்ததால், ருதுராஜுடன் ஆலோசித்த கான்வே, டிஆர்எஸ் கேட்க டிஆர்எஸ் வசதி இல்லை என்று அம்பயர் கூறினார். கேப்டன் ரோகித் சர்மாவும் அம்பயரிடம் பேச பின்னர் ஏமாற்றத்தோடு கான்வே பெவிலியன் திரும்பினார்.


கான்வேவின் விக்கெட் தெளிவாக இல்லாத நிலையில் டிஆர்எஸ் இல்லை என்று கூறியதால் வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கான்வே 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சந்தேகத்திற்கிடமான எல்பிடபிள்யூ-விற்கு எப்படி அவுட் கொடுக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று? பதிவிடப்பட்டிருந்தது. அதே போல, சில ஓவர்களுக்குப் பிறகு ராபின் உத்தப்பாவிற்கு பும்ரா பந்து வீசினார். அவருக்கும் அவருக்கும் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. உத்தப்பாவும் ரிவியூ கேட்க அவருக்கும் இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் அவரும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.





ஐபிஎல் போட்டியை நடத்தும் பிசிசிஐ-யோ, போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமோ ஏன் டிஆர்எஸ் வசதி கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை சொல்லவில்லை. எனினும் போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் இருந்த மின்வெட்டு பிரச்சனை தான் டிஆர்எஸ் முறை கிடைக்காததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.






மைதானத்தில் மின் தடை இருந்ததால் டிஆர்எஸ் முறை இல்லை. கான்வே மற்றும் உத்தப்பா ஆகியோர் எல்பிடபிள்யூ முறையால் ஆட்டமிழந்துள்ளனர். நன்றாக விளையாடினீர்கள் மும்பை அம்பயர்களே என்றும், 






அதிர்ஷ்டமற்றவர் கான்வே, பந்து லெக் ஸ்டெம்ப்பிலிருந்து விலகிச் செல்கிறது. மைதானத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக அவரால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்று ஒருவரும், 






இவ்வளவு பெரிய தொடர், பெரும் பணம் செல்கிறது ஆனால் மின் தடை காரணமாக டிஆர்எஸ் இல்லையா? என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






இது போன்று சென்னை ரசிகர்கள் பலர் டிஆர்எஸ் முறை மறுக்கப்பட்டதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை அணியின் நேற்றைய தோல்வியால் ப்ளே ஆஃபுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்தது.