ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 200ஆவது போட்டியாக இருந்தது. 


இந்தச் சூழலில் போட்டிக்கு பிறகு மகேந்திர சிங் தோனி சென்னை அணி குறித்து பேசியுள்ளார். அதில், “2008ஆம் ஆண்டில் சென்னை அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்த ஆரம்பித்தேன். அப்போது முதல் சென்னை, தென்னாப்பிரிக்கா, துபாய் எனப் பல ஆடுகளங்களில் சென்னை அணியை வழி நடத்தியுள்ளேன். தற்போது மும்பையில் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்து பார்த்தில்லை. 




200ஆவது போட்டி என்று நினைக்கும் போது எனக்கு வயதாகி விட்டது போல் தோன்றுகிறது. 2011ஆம் ஆண்டு வரை சென்னை ஆடுகளம் சிறப்பாக இருந்தது. அதன்பின்னர் மாற்றியமைக்கப்பட்ட சென்னை ஆடுகளம் மிகவும் மோசமானதாக உள்ளது. ஏனென்றால் முன்பாக இருந்த ஆடுகளத்தில் வேகப்பந்து  மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இரு வகையான பந்துவீச்சாளர்களுக்கும் பவுன்ஸ் கிடைக்கும் வகையில் ஆடுகள் இருந்தது ஒரு பெரிய சாதகமாக அமைந்தது. 


 


தற்போது புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஆடுகளத்தில் அந்த அளவிற்கான பவுன்ஸ் இல்லை. ஆடுகளத்தில் பனி இருந்தால் சற்று பவுன்ஸ் கிடைக்கிறது அப்போது மட்டும் பேட்டிங் செய்ய நன்றாக உள்ளது. ஆனால் தற்போது நாங்கள் விளையாடும் மும்பை ஆடுகளம் மிகவும் சிறப்பானதாக உள்ளது ”  எனத் தெரிவித்தார். 




முன்னதாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தீபக் சாஹரின் பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் மல மல வென விக்கெட்டை பறி கொடுத்தது. இறுதியில் பஞ்சாப் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி டூபிளசிஸ்-மொயின் அலி ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 26 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றிப் பெற்று அசத்தியது. 




மேலும் இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஷாரூக்கான் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 47 ரன்களை குவித்து வெளியேறினார். இவரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி 100 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் மூலம் ஷாரூக் கானும் வெளிச்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.