தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது.


அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து "புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.






தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.


தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


Also Read: உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: கொடியை பயன்படுத்திக்கோ... வெற்றியோட வா.... வாழ்த்தி அனுப்பிய விஜய்!


Amarinder Singh Resigns: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அம்ரிந்தர் சிங் : பஞ்சாப் காங்கிரஸில் திருப்பம்!