நடிகர் அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணிவு படத்துக்குப் பின் நடிகர் அஜித்குமார் நடிப்பில் “விடா முயற்சி” படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதலில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் விலகினார். நீண்ட இழுபறிக்குப் பின் இயக்குநர் மகிழ் திருமேனி விடா முயற்சி படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படம் டைட்டில் அறிவிப்போடு நின்றுவிட்ட நிலையில், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவ்வப்போது மகிழ் திருமேனி ட்விட்டரில் விரைவில் விடாமுயற்சி என அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இதனையடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து திட்டமிட்டபடி விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் அமைந்துள்ள அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் விடா முயற்சி ஷூட்டிங்கில் மாரடைப்பு காரணமாக கலை இயக்குநர் மிலன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கலை இயக்குநர் மிலன்
1999 ஆம் ஆண்டு கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய மிலன்,பின்னர் சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன், அந்நியன் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து கலை இயக்குநராக 2006 ஆம் ஆண்டு வெளியான கலாபக்காதலன் படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, பில்லா,ஏகன், ஓரம் போ, வேட்டைக்காரன், சிக்கு புக்கு,ஜக்குபாய், வேலாயுதம், என்றென்றும் புன்னகை, வீரம், ரோமியோ ஜூலியட், வேதாளம், விவேகம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.