கனடா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யுஜீன் பௌகார்ட். இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அப்போது டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் கனடா வீராங்கனை என்ற பெருமையை யுஜீன் பௌகார்ட் பெற்றார். இவர் நீண்ட நாட்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.


 


இந்நிலையில் தற்போது அவர் வான் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். அந்தத் தொடருக்கு தரப்படும் ஐடி கார்ட்டில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், வழக்கமாக வீராங்கனைகளின் படம் இடம்பெற்று இருக்கும். ஆனால் இவருடைய தொடர் ஐடி கார்டில் நீச்சல் உடையில் இவர் இருப்பது போல் படம் இடம்பெற்றுள்ளது. இந்த ஐடி கார்டு படத்தை யுஜீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்திருந்தார். 


 






இதைத் தொடர்ந்து அவருக்கு வான் ஓபன் டென்னிஸ் ஏற்பாட்டாளர்கள் புதிய ஐடி கார்டை வழங்கியுள்ளனர். இவருக்கு முதலில் வழங்கப்பட்ட ஐடி கார்டில் 2018ஆம் ஆண்டு நீச்சல் உடையில் யுஜீன் எடுத்த படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 17 மாத இடைவேளைக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய யுஜீன் தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வந்தார். 


 


ஆகவே வான்கோவர் ஓபன் தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல் சுற்று போட்டியில் அரைன் ஹரட்டோவிடம் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்த யுஜீன் முதல் சுற்றில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இரட்டையர் பிரிவில் இவர் கனடாவின் கயலா க்ராஸ் உடன் இணைந்து விளையாடினார். இவர் அதில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார். காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 


 



யுஜீன்(படம்:Instagram@geniebouchard)


யுஜீன் அடுத்து யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் விளையாட உள்ளார். நீண்ட நாட்களாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காத காரணத்தால் தற்போது இவர் டென்னிஸ் தரவரிசையில் இடம்பெறவில்லை. ஆகவே யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.