உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென், பிரணாய், சாய்னா நேவால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் நேற்று உலக தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள கெண்டோ மோமோட்டோவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரணாய் அசத்தலாக வென்றார். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் மற்றும் பிரணாய் மோதினர். இதில்  முதல் கேமை லக்‌ஷ்யா சென் 21-17 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு கேமிலும் பிரணாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21-16,21-17 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 


 






பிரணாய் தன்னுடைய காலிறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் 23வது இடத்திலுள்ள பெங்க் ஸாவோவை எதிர்த்து விளையாட உள்ளார். இதுவரை சீன வீரர் பெங்க் மற்றும் பிரணாய் ஒரு முறை மட்டும் சந்தித்துள்ளனர். அதில் சீன வீரர் பிரணாயை வீழ்த்தியுள்ளார். இதன்காரணமாக காலிறுதிச் சுற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இரண்டு ஜோடிகளும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சிராக்-சத்விக் ஜோடி 21-12, 21-10 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 


 






அதேபோல் மற்றொரு ஜோடியான அர்ஜூன்-துருவ் கபிலா இணை சிங்கப்பூரை சேர்ந்த லீ-ஹோ இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 18-21 என்ற கணக்கில் முதல் கேமை இந்திய ஜோடி இழந்தது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய துருவ் கபிலா-அர்ஜூன் ஜோடி அடுத்த இரண்டு கேமையும் 21-15,21-16 என்ற கணக்கில் வென்று அசத்தியது. மேலும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.