உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ்-சிராக் ரெட்டி ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்தப் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்திருந்தது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சூ வூயியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு ஜோடிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றன. இதன்காரணமாக முதல் கேமை இந்திய ஜோடி 22-20 என்ற கணக்கில் வென்றது. 


 






இதன்பின்னர் இரண்டாவது கேமில் மலேசிய ஜோடி சுதாரித்து கொண்டு விளையாடியது. அந்த கேமை மலேசிய ஜோடி 21-18 என்ற கணக்கில் வென்றது. இரு ஜோடிகளும் தலா 1 கேமை வென்று இருந்தன. இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 3வது கேம் நடைபெற்றது. இந்த கேமில் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எனினும் பிற்பாதியில் சில தவறுகளை செய்தனர். இதன்காரணமாக கடைசி கேமை 21-16 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.


மலேசியா இணை உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. அந்த ஜோடியிடம் 20-22,21-18,21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் சத்விக்-சிராக் ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை சிராக்-சத்விக் இணை படைத்துள்ளது. 


 




உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தற்போது வரை இந்திய பதக்கம் வென்று வருகிறது. அந்தச் சாதனையை இந்தியா இந்தாண்டும் தக்கவைத்துள்ளது. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.