ஆதிகாலம் முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படியாவது சினிமா திரைப்படங்களில் ஒரு காட்சியில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். ஒரு சிலர் பணம் கொடுத்தோ, அவர்களது பாலியல் ஆசைக்கு இணங்கியோ ஏமாந்து விடுகின்றனர். 


பிரபலம் ஆகவேண்டும் என்ற ஆசை யாரை விட்டது. சினிமாவை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே டிக்டாக், யூடியூப் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது திறமை என்றோ ஒருநாள் வெளியே தெரியவரும் என்று பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இதையும் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பிரபலம் ஆக நினைக்கும் நபர்களை ஏமாற்றி வரும் செய்திகளையும் அன்றாடம் கேட்டு வருகிறோம். 


அந்த வகையில், நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.


தகவலின்படி, குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் தலைமையில் விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கரான 32 வயதான ஜான்சி (எ) பூர்ணிமா, கடலூர் மாவட்டம், வடக்கரை, திட்டக்குடி தாலுகாவை சேர்ந்த 24 வயதான சூர்யா (எ) ராஜா, மயிலாடுதுறை மாவட்டம், மாயவரம் வடக்கு தெருவை சேர்ந்த குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.


மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் விசாரணையில் கைது செய் யப்பட்ட புரோக்கர் ஜான்சி மீது பெண்களை வைத்து பாலியலை தொழில் நடத்திய குற்றத்திற்காக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், இவர் 2 முறை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும்,  சூர்யா (எ)ராஜா மீதும் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.