உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், பிரனாய் ஆகிய நான்கு பேரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து உலக தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான தாய் சு யிங்கை எதிர்த்து இன்று காலிறுதியில் விளையாடினார். 


இந்தப் போட்டியில் முதல் கேமில் தாய் சு யிங் அதிரடியாக தொடங்கினார். வேகமாக 11 புள்ளிகளை தாய் சு யிங் எடுத்தார். அதன்பின்னர் பி.வி.சிந்து வேகமாக புள்ளிகளை சேர்க்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் 14-10 என்ற கணக்கில் சிந்து தாய் சு வின் முன்னிலையை குறைத்தார். எனினும் தாய் சு யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-17 என்ற கணக்கில் முதல் கேமை வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் இரண்டு வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக தொடங்கினர். ஒரு கட்டத்தில் இரண்டு வீராங்கனைகளும் 8-7 என்ற கணக்கில் சமமாக இருந்தனர்.


அதன்பின்னர் தாய் சு யிங் புள்ளிகளை அடுத்தடுத்து எடுக்க தொடங்கினார். இறுதியில் இரண்டாவது கேமையும் தாய் சு யிங் 21-13 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து இந்த தொடரிலிருந்து தோல்வி அடைந்து வெளியேறினார். 






உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து முதல் இடத்தில் இருக்கும் தாய் சு யிங்கை இதுவரை 20 முறை சந்தித்துள்ளார். அதில் 15 முறை தாய் சுயிங்கும், 5 முறை பி.வி.சிந்துவும் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக தாய் சு யிங்கை பி.வி.சிந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் தோற்கடித்தார். அதன்பின்னர் இந்த இருவருக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் தாய் சு யிங் தான் வெற்றி பெற்று வருகிறார். குறிப்பாக இந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி போட்டியிலும் பி.வி.சிந்து தாய் சுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: லங்கா ப்ரீமியர் லீகில் கலக்கும் யாழ்ப்பாண தமிழர்: யார் இந்த விஜய்காந்த்?