AIADMK Protest: அதிமுக அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி அதை புதிய பெயரில் அமல்படுத்திக் கொள்வதே வேலையாக இருக்கிறது திமுகவுக்கு. அம்மா சிமென்ட் விற்பனை செய்தால் அதை இப்போது வலிமை சிமென்ட் எனக் கூறுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்துள்ளது.


7 மாதங்களில் எந்த ஒரு முக்கிய வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும், நெற்பயிர்‌ ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 40,000/- ரூபாய்‌ என நிவாரணம்‌ உயர்த்தி வழங்கப்பட வேண்டும், மறு சாகுபடிக்கென ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 12,000/- ரூபாய்‌ அளிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும்‌ தலா 5,000/- ரூபாய்‌ பொங்கல்‌ பரிசாக அளிக்க வேண்டும், அம்மா மினி கிளினிக்குகளை மூடக்கூடாது, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ உட்பட அனைவருக்கும்‌ 5,000/- ரூபாய்‌ ஊக்கத்‌ தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.


சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


தேனியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசுகையில், "டிசம்பர் 9 ஆம் தேதி ஆளும் திமுகவுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் என்று அறிவித்தவுடன் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடமும் தொலைபேசியில் பேசினேன். தங்கள் மாவட்டங்களில் பொதுமக்கள் திரண்டுவந்து திமுக ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நிர்வாகிகள் கூறினர்.


அதே போல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ .1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகையை ர .1500 ஆக உயர்த்துவோம் என்றார்கள். அரசு அளித்த அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது . மாணவர்களின் கல்விக்கடனை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார்கள் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி இன்னும் அடிக்கிக் கொண்டே போகலாம்.




போக்குவரத்து தொழிலாளர்களின் முந்தைய ஓய்வூதியம் திரும்ப வழங்கப்படும் என அளித்த கோரிக்கையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.  ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் திமுக அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உலக சாதனை செய்தது போல் பேசுகின்றனர்" என்றார்.


இதேபோல் சேலத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை என்று அர்த்தம். இங்கு திமுகவால் அதிமுகவின் அடிப்படைத் தொண்டரை கூட அசைத்துப் பார்க்க முடியாது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


அதிமுக அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி அதை புதிய பெயரில் அமல்படுத்திக் கொள்வதே வேலையாக இருக்கிறது திமுகவுக்கு. அம்மா சிமென்ட் விற்பனை செய்தால் அதை இப்போது வலிமை சிமென்ட் எனக் கூறுகிறார்கள்.


அப்படி என்றால், நாங்கள் என்ன வலிமையில்லாத சிமென்ட்டா விற்பனை செய்தோம்? போதாதற்கு நாங்கள் குறைந்த விலையில் நல்ல தரத்தில் கொடுத்த அம்மா சிமென்ட்டின் விலையை அதிகரித்து வலிமை சிமென்ட் என்று விற்பனை செய்யக் கிளம்பியுள்ளனர். இன்னும் 2 ஆண்டு தான் இந்த ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், இங்கும் தேர்தல் வரும்..." என்றார். 


இதேபோல் மாநிலம் முழுவதுமே அந்தந்த மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.