உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், சத்விக் சாய்ராஜ்-சிராஜ் செட்டி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சோச்சுவாங்கை எதிர்கொண்டார். 


உலக தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனையிடம் சிந்து இந்தாண்டு இரண்டு முறை தோல்வி அடைந்திருந்தார். இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் கேமை 21-14 என்ற கணக்கில் சிந்து வென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. கடைசியில் 21-18 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். அத்துடன் 21-14,21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 






இதன்மூலம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7-வது முறையாக பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்தாண்டு முதல் முறையாக தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்கை தோற்கடித்தார். அடுத்து நடைபெற உள்ள காலிறுதி சுற்று போட்டியில் சிந்து உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய்சு யிங்கை எதிர்த்து விளையாடுகிறார். அந்த போட்டியும் மிகவும் கடினமான ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றுள்ள லக்‌ஷ்யா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக உலக தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் வீரரான நிஷிமோட்டோவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22-20,15-21,21-18 என்ற கணக்கில் போராடி வென்றார். அத்துடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். அவருடன் சேர்ந்து மற்றொரு இந்திய வீரர் ஶ்ரீகாந்த்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 


மேலும் படிக்க:“நோ கமெண்ட்ஸ்” : டீல் பண்ண தெரியும்.. கோலி பேச்சுக்கு பதிலளித்த கங்குலி