106 நாட்கள் தொடர்ந்து 106 மராத்தானில் பங்கேற்ற 35 வயதான பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.


தடகள வீரர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஏதாவது சாதனை படைத்துக்கொண்டே இருப்பார்கள். நீச்சல் வீரர்கள் கடலில் நீண்ட தூரம் நீச்சல் செய்வது, மலையேற்றம் என உலகசாதனைக்காகவும் சிலர் இப்படியான சாதனையை செய்வார்கள். அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மராத்தான் வீரர் ஒருவர் தொடர்ந்து 106 நாட்கள் மராத்தான் ஓடி சாதனை படைத்துள்ளார்.


இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான கேட் ஜாடன் ஒரு தடகள  வீரர் ஆவார். இவர்  கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிமுதல் தினமும் மாரத்தான் ஓட தொடங்கியுள்ளார். தினமும் 42.1 கிலோமீட்டர் ஓடி தன்னுடைய மராத்தானை முடித்துள்ளார். டிசம்பர் 31 முதல் ஏப்ரல் 15 வரை 106 நாட்கள் தினமும் இந்த மராத்தானை ஓடி முடித்துள்ளார் கேட். 






அகதிக்களுக்காக நிதி சேகரிக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வுக்காகவும் இந்த மராத்தானை அவர் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே ரூ.41 லட்ச நிதியை அவர் சேகரித்துள்ளார். அதேபோல நிதிக்காக தொடங்கப்பட்ட மராத்தான் என்றாலும் மக்கள் மற்றும் ஊடகங்களில் பார்வை அவர் மீது விழுந்ததால் உலக சாதனைக்கும் அவர் விண்ணப்பித்தார். தொடர்ந்து 106 நாட்கள் மராத்தான் என்பதை கின்னஸ் ரெக்கார்டாகவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.






கிட்டத்தட்ட 46 நாட்கள் எந்தப்பிரச்னையும் இல்லாமல் ஓடிய கேட்டுக்கு அதன்பின்னர் அவரது கால்கள் ஒத்துழைக்கவில்லை. மருத்துவமனையை அணுகியபோது அவரது முட்டிப்பகுதியின் எலும்பு பகுதியில் லேசான முறிவும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் சாதனையை முடிக்க வேண்டுமென்பதற்காக முறிந்த எலும்போடு 106 நாட்களை நிறைவு செய்துள்ளார் கேட்.