கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் ஆறரை மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் 17% அதிகரித்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை வழக்குகளும், எட்டு பெண்கள் மீது தாக்குதல் வழக்குகளும் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 6,747 ஆகவும், இந்த ஆண்டு 7,887 ஆகவும் அதிகரித்துள்ளது.


பெண்கள் மீதான தாக்குதல் வழக்குகள் 19% வரை அதிகரித்துள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 7% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதலின் பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தகாரர்கள் என்று டெல்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


2022 ஆம் ஆண்டில் கணவன் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தியதாக மொத்தம் 2,704 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 2021 இல் இந்த எண்ணிக்கை 2,096 ஆக இருந்தது, வரதட்சணை இறப்பு 69 வழக்குகள் மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் ஏழு வழக்குகளும் பதிவாகியுள்ளது. கணவன் மற்றும் மாமியார்களால் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் இந்த காலகட்டத்தில் 29% அதிகரித்துள்ளது. 




அதேபோல், கடந்த ஆண்டை காட்டிலும் பெண்களைக் கடத்தும் வழக்குகள் கிட்டத்தட்ட 43% குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில், இந்தாண்டு பெண்களைக் கடத்தும் வழக்குகள் 17 % பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், "எந்தக் குற்றமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண் அசௌகரியமாக உணர்ந்தால், வழக்குகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். 


நிறைய பெண்கள், காவல்துறையை அணுகுவது கடினம் என்பதால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை எப்படி அணுகுவது என்பதை மக்களுக்குக் கற்பிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். பெண்கள் உட்பட அவர்களது பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளூர் காவல்துறையினருக்கு நாங்கள் தொடர்ந்து தெரிவிக்கிறோம். மேலும் இதுபோன்ற உரையாடல்கள் போலீஸ் மீது அவர்களின் நம்பிக்கையை வளர்க்கும். 


டெல்லி காவல்துறையின் மகளிர் உதவி மையம் மூலம் பெண்களுக்கு 24 மணி நேரமும் வேலை செய்யும் அவசர புகார் எண் 112 ஐ பயன்படுத்தி SOS ஐ அனுப்பலாம். எங்களுக்கு மிஸ்டு கால் வந்தாலும், அந்த எண் குறித்து நாங்கள் உடனடி விசாரணை நடத்துவோம்” என்றும் தெரிவித்துள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண