உலகின் மிகப்பெரிய குத்துச்சண்டை ஜாம்பவனாக வலம் வந்தவர் முகமது அலி. அவரது பேரன் நிகோ அலி வால்ஷ். 21 வயதே நிரம்பிய நிகோ அலி வால்ஷ் தனது தாத்தாவைப் போலவே அவரும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வந்தார். தன்னை ஒரு முழு மிக்சல் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ. தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாற்றிக்கொண்டார்,


இந்த நிலையில் அவர் அமெரிக்காவின் தனது முதல் தொழில்முறை போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் ஜோர்டான் வீக்ஸ் என்ற குத்துச்சண்டை வீரருடன் மோதினார். போட்டி தொடங்கியது முதல் முகமது அலியின் பேரன் மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். அவரது ஒவ்வொரு குத்துக்களும் எதிர்த்து ஆடிய ஜோர்டான் வீக்சை நிலைகுலைய வைத்தது. போட்டி தொடங்கிய 90வது வினாடியிலே நிகோ அலி வால்ஷ் ஜோர்டானுக்கு குத்து விடத் தொடங்கினார். இந்த போட்டியில் நிகோ அலி வால்ஷ் சுமார் 1.49 நிமிடங்களில் ஜோர்டான் வீக்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




நிகோ அலி வால்ஷ் தனது தாத்தா முகமது அலி போட்டிகளின் போது பயன்படுத்தும் கருப்பு பட்டையை போன்றே தானும் அணிந்து ஆடினார். இந்த போட்டியை பாப் ஆரம் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். முகமது அலியின் பெரும்பாலான குத்துச்சண்டை போட்டிகளை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர் இந்த பாப் ஆரம்தான். 1966ம் ஆண்டு ஜார்ஜ் சாவலோவுடனான முகமது அலியின் குத்துச்சண்டை போட்டி முதல் 1978ம் ஆண்டு அவர் ஆடிய அனைத்து போட்டிகளையும் பாப் ஆரம்தான் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து நடத்தியவர்.


இந்த போட்டி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாப் ஆரம், “  இந்த இளைஞனுக்கு மந்திரமான இரவு இது. அவனது தாத்தாவை அவரது வழியிலே இந்த இளைஞன் பெருமைப்படுத்திவிட்டான். இந்த இளைஞனின் தொழில்முறை வாழ்க்கையை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முகமது அலியின் 9 வாரிசுகளில் ஒருவரான ரஷீதா அலி வால்ஷின் மகன் இவர் ஆவார்.




இந்த போட்டியை முகமது அலியின் மகளும், நிகோ அலி வால்ஷின் தாயாருமான ரஷீதா அலி வால்ஷ் நேரில் கண்டு ரசித்தார். முகமது அலியின் பேரன் தற்போது அவரது தாத்தாவைப் போலவே, குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கி தனது அறிமுகப் போட்டியிலே வெற்றி பெற்றிருப்பதை சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நிகோ அலி வால்ஷ் அமெரிக்காவின் லாஸ் வெகாசில் உள்ள நெவாடா பல்கலைழகத்தில் வணிகப்படிப்பில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.