ஆஃப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய நகரங்களை தலிபான் படையினர் கைப்பற்றி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், அந்த நாட்டின் முக்கிய நகரங்களான காந்தஹார், ஹெரத் ஆகியவற்றை தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது அந்தப் படை தலைநகர் காபூலை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதையடுத்து அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். முக்கிய நகரமான ஜலாலாபாத் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து தலைநகர் காபூல் ஒட்டுமொத்தமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படையை அந்த நாட்டிலிருந்து திரும்பப்பெற அரசு ஆலோசகர்கள் பலர் அதிபர் ஜோ பைடனை வலியுறுத்தி வருகின்றனர். படைகள் திரும்பப்பெறப்படும் என உறுதியளித்துள்ளார் ஜோ பைடன். அதே சமயம் அந்த நாட்டிலிருந்து பொதுமக்களை அகற்றுவதற்கும் அமெரிக்கப் படைகளை ஒருங்கிணைத்து அழைத்து வரவும்  மேலும் 5000 பேர் கொண்ட படை ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களை அப்புறப்படுத்துபவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படக்கூடாது எனவும் அவர் தலிபான்களை எச்சரித்துள்ளார். அப்படித் தாக்குதல் நடத்தப்படும் சூழலில் அமெரிக்க ராணுவம் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அவர். 


முன்னதாக, கடந்த, மே மாதத் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில்  பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. தற்போது, நாட்டின் 220க்கும் அதிகமான மாவட்டங்கள் தற்போது தலிபான்  படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. நாட்டின் 15 மாகாணாங்களின் தலைநகரங்கள் தற்போது தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹெராத், சர்-இ-புல், குண்டூஸ், ஷேபர்கான், நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் ஸ்ராஞ், கந்தஹார், ஹெராத் உள்ளிட்ட முக்கிய தலைநகரங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பின் உச்சகட்ட சம்பவமாக, இரு தினங்களுக்கு முன்பாக குண்டூஸ் மாகாணத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்தை தாலிபான் கைப்பற்றியது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், துப்பாக்கி கருவியை தலிபான் படைகளிடம் ஒப்படைத்து சரணடையும் வீடியோ சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது.




 


ஆப்கானிஸ்தானில் ராணுவக் கட்டமைப்பு ஏன் சரிந்தது? 


அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியின் அடையாளமாக ஆஃப்கானிஸ்தான் உள்ளது. 20 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய  பாதுகாப்புப் படையை உருவாக்க அமெரிக்கா முனைந்தது. முழுமையான எல்லைப் பாதுகாப்புப் படையை உருவாக்கப்பட்டு நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கவும், அதன் மூலம் மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்பதே பராக் ஒபாமாவின் முக்கியத் திட்டமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும் சரிவை ஏற்படுத்தின. 


மேலும், ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல் போக்குகளும் அதன் ராணுவக் கட்டமைப்பை பலவீனமாக்கின. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையில் 3 லட்சம் வீரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இதில் 6ல் 1 பங்கு எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் கூட அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், நவீன தொழில்நுட்ப கட்டமைப்புக்கு முக்கியத்துவம்  கொடுத்த அளவுக்கு மனித வளங்களுக்கு முக்கியத்தும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.