இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். இதில் கண்டிப்பாக தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான லவ்லினா போர்கோஹைன் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியில் களம் இறங்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதிசுற்று திரைப்படத்தில் வருவதுபோல இவரது பயிற்சியாளரை காமன்வெல்த் கிராமத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.



லவ்லினா போர்கோஹைன்


வடக்கு அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர பரோமுகியா கிராமத்தைச் சேர்ந்த லவ்லினா, இன்று இவர் இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்து உள்ளார். இவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். அஸ்ஸாமில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த இவர், வித்யாசமான முறையில் குத்துச்சண்டை பயின்றவர். இவர் போன்ற சாதாரண மக்களின் இருந்து இந்திய நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது பலருக்கும் ஊக்கமூட்டும் விஷயமாகும். இவர் 'முய் தாய்' எனப்படும் 'தாய்' வடிவத்தில் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலைஞர் ஆவார். 


தொடர்புடைய செய்திகள்: Commonwealth Games 2022: பிவி சிந்து முதல் ஹிமா தாஸ் வரை! தங்கம் தட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படும் 10 நட்சத்திரங்கள்!


பயிற்சியாளருக்கு அனுமதி இல்லை


இந்த காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான 70 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் லவ்லினா போர்கோஹைன் கலந்து கொள்கிறார். ஆனால் இவரது பயிற்சியாளரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. காமன்வெல்த் கிராமத்திற்குள் தனது பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சில பயிற்சி சிக்கல்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். இது குறித்து மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கப்பட்டாலும், அவரது பயிற்சியாளர் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.






ட்விட்டரில் பதிவு


லவ்லினா அவரது ட்விட்டர் பதிவில், "ஒலிம்பிக் போட்டியில் நான் பதக்கம் வெல்ல உதவிய எனது பயிற்சியாளர்கள்தான். ஆனால் எப்போதும் அவர்கள் எனது பயிற்சி மற்றும் போட்டியிலிருந்து விளக்கி வைக்கப் படுகின்றனர். எனது பயிற்சியாளர்களில் ஒருவரான சந்தியா குருங் ஜி, துரோணாச்சார்யா விருது பெற்றவர். இந்த காமன்வெல்த் போட்டியில் சந்தியா குருங் ஜி உடனான எனது பயிற்சி எட்டு நாள்களுக்கு முன்பு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது பயிற்சிக்கு இடையூறு விளைவிப்பதோடு மட்டுமின்றி, மனரீதியாக, பல துன்பங்களுக்கும் ஆளாக்குகிறது. இது போன்ற செயல்களால் எனது போட்டிகளில் நான் எப்படிக் கவனம் செலுத்தமுடியும் எனப் புரியவில்லை. இந்த நிலை கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் என் ஆட்டத்தைப் வீணக்கியது. இதுபோன்ற அரசியலை முறியடித்து நாட்டுக்காகப் பதக்கம் வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!" என்று அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


இறுதிசுற்று


இறுதிசுற்று திரைப்படத்தில் வருவது போலவே ஒரு சாதாரண பெண்ணாக இருந்து இந்த இடத்திற்கு வந்தவர் இவர். வித்யாசமான முறையில் குத்துச்சண்டை பயின்றவர். அவருக்கு சில பல உள் அரசியல் காரணங்களால் பல தடைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. திரைப்படத்தில் வருவது போலவே அவரது பயிற்சியாளரை உள்ளே விடாமல் தடுத்தவர்களுக்கு பதிலடியாக தங்கம் வென்று தர உத்வேகம் கொண்டு காத்திருக்கிறார். ஜூலை 30 அன்று அவர் வளையத்திற்குள் நுழையும் போது மோசமான இந்த அனுபவங்களை வெற்றிக்கனியாக்குவார் என பலர் நம்புகின்றனர். வென்றார் என்சரால் உண்மையில் நடக்கும் ஒரு இறுதிசுற்று திரைப்படத்தை காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.