அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் இதில் பங்கேற்கிறார்.
ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. எனினும் நீண்ட காலமாக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. மாநிலத்தின் பிற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில், ஆளுநர் - உயர் கல்வித்துறை அமைச்சர் மோதலும் பேசுபொருளாக மாறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுத்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
பிரதமர் தமிழகம் வருகை: 7 அடுக்குப் பாதுகாப்பு
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28ஆம் தேதி) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 29ஆம் தேதி) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். இதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் 7 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக 1952-ல் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி)பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். 1948-ல் உருவாக்கப்பட்ட எம்ஐடி பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் 2ஆவது பிரதமராக 70 ஆண்டுகள் கழித்து, மோடி பங்கேற்கிறார்.
முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்