இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். அதில் தங்கம் வெல்வார்கள் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படும் வீரர்கள் 10 பேர் லிஸ்ட் இதோ.


பிவி சிந்து


இந்தியாவில் பேட்மிட்டன் வீராங்கனை பற்றி பேசினால் முதலில் நினைவுக்கு வரும் இரண்டு பெயர்கள் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து. சாய்னா பல சாதனைகளை குவித்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அதற்கு பிறகு பிவி சிந்து உலகத் தரம் வாய்ந்த வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வீராங்கனை இவர்தான். சிந்து 2022 இல் சிங்கப்பூர் ஓபன் மற்றும் சுவிஸ் ஓபன் பட்டங்களை வென்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இவரிடம் இருந்து மற்றொரு காமன் வெல்த் பதக்கம் எதிர்பார்கிறது நாடு.



நிகத் ஜரீன்


இவ்வருடம் மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரித்திர சாதனை படைத்த தெலங்கானாவை சேர்ந்த 25 வயதான நிகத் ஜரீன் தான் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம். 52 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை (Jutamas Jitpong) 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்திருந்தார் நிகத். அவர் அந்த பதக்கம் வென்ற போதே இந்தியாவுக்கு காமன்வெல்த்தில் குத்துச்சண்டையில் ஒரு பதக்கம் உறுதியானதாக பேச்சுக்கள் வந்தன. அது போலவே ஒரு தங்கத்தை பெற்றுத்தருவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


மீராபாய் சானு


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020ல் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் ஆரம்பித்து வைத்தவர் மீராபாய் சானு. மணிப்பூரைச் சேர்ந்த சானு, கிளாஸ்கோவில் வெள்ளி மற்றும் கோல்ட் கோஸ்டில் தங்கம் வென்ற இரண்டு முறை காமன்வெல்த் போட்டிகளில் ஏற்கனவே பதக்கம் வென்றவர். டிரக்கில் லிப்ட் கேட்டு பயிற்சிக்கு செல்லும் அவரது கதை அவர் துணிச்சலுக்கு ஒரு சான்றாகும். இம்முறை கடும் பயிற்சி செய்து தயாராகி இருக்கும் அவருக்கு தங்கத்தை விட குறைவாக எது கிடைத்தாலும் ஏமாற்றமே தரும் என்ற அளவிற்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. ஜூலை 30 (நாளை) அன்று பெண்கள் 55 கிலோ பிரிவில் சானு போட்டியிடுகிறார்.


ரவி குமார் தாஹியா


மல்யுத்த வீரர் ரவி குமார் தாஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ஆச்சர்யம் அளித்தார். ஆடவர்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் எடைப்பிரிவில் அவர் பதக்கம் வென்றிருந்தார். இதே எடைப் பிரிவில் அவர் காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்கிறார். மல்யுத்தத்தில் இவரன்றி, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் போன்ற நட்சத்திரங்களும் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.



இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:


காமன்வெல்த் அரங்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது இதுவே முதன்முறை. கிரிக்கெட் போட்டிகள் வரும் இன்று (29 ஜூலை) முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு பிரிவுகளாக போட்டியிடுகின்றனர். போட்டிகள் 20 ஓவர் கிரிக்கெட்டாக நடைபெற உள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் சுற்றில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடும், அதன் பிறகு இறுதிப்போட்டி. இந்த சூழலில், தங்கம் தான் இலக்கு என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.


இந்திய ஆண்கள் ஹாக்கி அணி


கடந்த 1998 முதல் காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி விளையாடப்பட்டு வருகிறது. அதில் நடைபெற்ற ஆறு முறையுமே ஆஸ்திரேலிய அணி மட்டுமே தங்கம் வென்றுள்ளது. இம்முறை, மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இந்த காமன்வெல்த் போட்டிகளில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் மற்றும் கானா அணிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதே காமன்வெல்த் 2010 மற்றும் 2014 வருடங்களில் இந்திய அணி வெள்ளி வென்றது. அதோடு மன்பிரீத் சிங் தலைமையிலான அணி தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லக்‌ஷயா சென்


20 வயதே ஆகும் லக்‌ஷயா சென் ஏற்கனவே ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இந்த வருடம் தான், இந்தியா 14 முறை தாமஸ் கோப்பை வென்ற இந்தோனேசியாவை வீழ்த்தி பட்டத்தை வென்றது. பலர் தாமஸ் கோப்பை வென்றதை இந்திய கிறிகெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற தருணத்துடன் ஒப்பிட்டு புகழ்ந்தனர். லக்ஷ்யா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றவர். ஆகஸ்ட் 3 ஆம் தேதி காமன்வெல்த் 2022 இல் லக்ஷ்யா தனது போட்டிகளை தொடங்குவார். பாட்மிட்டனில் தங்கம் வெல்லும் நம்பிக்கை நட்சத்திரமாக அனைவரின் ஆதரவையும் ஏற்கனவே வென்றுள்ளார்.



ஹிமா தாஸ்


'திங் எக்ஸ்பிரஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் அஸ்ஸாமில் இருந்து வந்துள்ள புல்லட் வேக ரன்னர் ஹிமா தாஸ், பெண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க காமன்வெல்த் செல்கிறார். ரிலே போட்டிக்கான இந்திய அணியில் டூட்டி சந்த், ஸ்ரபானி நந்தா, எம்வி ஜில்னா மற்றும் என்எஸ் சிமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அர்ஜுனா விருது பெற்ற ஹிமா தாஸ் ஒரு அனுபவமிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட மேலும் பல்வேறு உலக நிகழ்வுகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் போட்டிகளில் இன்னும் பதக்கம் வெல்லவில்லை. எனவே இதனை அதற்கு ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


லவ்லினா போர்கோஹைன்


இந்த காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான 70 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் லவ்லினா போர்கோஹைன் கலந்து கொள்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா இம்முறை தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். அஸ்ஸாமைச் சேர்ந்த நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான லவ்லினா, 'முய் தாய்' எனப்படும் 'தாய்' வடிவத்தில் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது. காமன்வெல்த் கிராமத்திற்குள் தனது பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சில பயிற்சி சிக்கல்களை அவர் எதிர்கொண்டிருந்தாலும், ஜூலை 30 அன்று அவர் வளையத்திற்குள் நுழையும் போது அந்த மோசமான அனுபவத்தை வெற்றிக்கனியாக்கி தன் குருவிற்கு சமர்பிப்பார் என நம்புவோம். உண்மையான ஒரு இறுதிசுற்று திரைப்படத்தை காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கலாம்.


சாத்விக் & சிராக்


14 முறை சாம்பியனான இந்தோனேசியாவுக்கு எதிரான தாமஸ் கோப்பை வெற்றியை அடுத்து, ஆண்களுக்கான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிளும் தங்கத்தை இலக்காகக் கொண்டுள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த இளம் பாட்மிட்டன் வீரர்களான இவர்கள் ஒன்றிணைந்து முக்கிய உலக நிகழ்வுகளில் விளையாடியுள்ளனர். சாத்விக் மற்றும் சிராக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவிற்கு பல பதக்கங்களை கொண்டு வந்துள்ளனர், ஆனால் இம்முறை காமன்வெல்த் 2022 இல் தங்கம் வெல்வது ஒரு கடினமான வேலையாக இருக்கும். இருப்பினும் இருவரின் காரணமாக இந்திய தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.