இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி புனோவில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடியது. ஷிகர் தவான்(4), ரோஹித் சர்மா(25) விரைவில் வெளியேறிய நிலையில் அதன் பின் வந்த கேப்டன் கோலி அரை சதம் அடித்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ரிஷபந்த் ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை சிதறடித்தது. அதிரடி காட்டிய ராகுல் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 28 பந்தில் அரை சதம் அடித்த ரிஷபந்த், 40 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை பிடிக்க களமிறங்கிய இங்கிலாந்து அணி, நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது ராய்(55) அவுட் ஆனார். அடுத்த வந்த ஸ்டோக்ஸ் ரன் மழை பொழிய இந்திய பவுலர்களின் முயற்சிகள் அனைத்தும் பயனற்று போனது. மறுபுறம் விளாசிய பேர்ஸ்டோவ் 11வது சதம் கடந்தார். 10 சிக்சஸ், 4 பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ் 99 ரன்னில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 124 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்லர் டக் அவுட் ஆனார்.
ஆயினும் லிவிங்ஸ்டன் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க 43.3வது ஓவரில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.