புனேயில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா 25, தவான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கோலி - ராகுல் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தி வந்தனர். கேப்டன் கோலி 62 பந்துகளில் தனது 62 அரைசதத்தை பதிவு செய்து ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அதன்பிறகு, களமிறங்கிய ரிஷாப் பன்ட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனிடையே, ராகுல் அரை சதம் அடித்தார். பின்னர், இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பன்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து மிரளவைத்த சிறிது நேரத்தில், ராகுல் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 108 ரன்னில் ராகுல், 77 ரன்னில் பன்ட் ஆட்டமிழக்க, கடைசியில் பாண்ட்யா சகோதரர்கள் பட்டையை கிளப்ப, 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.
பின்னர், 337 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ராய், பேர்ஸ்டோவ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். ராய் 55 ரன்னில் ரன் அவுட்டானார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு, பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
இவரும், பேர்ஸ்டோவும் சேர்ந்து, இந்திய பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில், பேர்ஸ்டோ தனது 11வது சதத்தை பூர்த்தி செய்ய, மறுபுறம் அரைசதம் அடித்து அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் 99 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் காலியானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு, பேர்ஸ்டோவும் 124 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர் டக் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 36.4 ஓவர்களுக்கு 287 ரன்கள் என இருந்தது.
பின்னர், லிவிங்ஸ்டன் (27), மாலன் (16) ஆகியோர் 43.3 ஓவர்களில் 337 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால், அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது. அடுத்தப் போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.