இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பிருத்வி ஷா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் மூன்றாவது இடத்தில் அறிமுக வீரர் இஷான் கிஷன் களமிறங்கினார். 


ஒரு நாள் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டி அசத்தினார். முதல் பந்து முதல் ஆட்டம் முழுவதும் அதிரடி காட்டிய இஷன் கிஷன் 42 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். அத்துடன் தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 36.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 




யார் இந்த இஷான் கிஷன்?


பீகார் மாநிலத்தின் போத்கையா பகுதியில் 1998ஆம் ஆண்டு பிறந்தவர் இஷான் கிஷன். எனினும் இவருடைய குடும்பம் ஜார்க்கண்ட் பகுதியை பூர்வீகமாக கொண்டது. ஆகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த மகேந்திர சிங் தோனியை போல் தானும் ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று இவர் சிறுவயதில் கனவு கண்டுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து விளையாடினார். அப்போது சரியாக இவர் செயல்படவில்லை. அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் 799 ரன்கள் குவித்து ஜார்க்கண்ட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அப்போது முதல் இவர் மீது வெளிச்சம் பட தொடங்கியது. 


எனினும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் களமிறங்கியது தான் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கடந்த இரு ஐபிஎல் தொடர்களில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் கலக்கி வருகின்றனர். இதன்விளைவாக இவர்கள் இருவருக்கும் முதலில் இங்கிலாந்து டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 




நேற்றைய போட்டியில் படைத்த சாதனைகள் என்னென்ன?


நேற்று தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இஷான் கிஷன் அறிமுக ஒருநாள் போட்டியில் பல ரெக்கார்டுகளை உடைத்து புதிய சாதனைகளை படைத்துள்ளார். அவை 



  • அறிமுக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கி அரைசதம் கடந்தார். இவருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் வென் டர் டசன் இச்சாதனையை படைத்துள்ளார். 

  • அறிமுக ஒருநாள் போட்டியில் ஒரு இந்திய வீரர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இதுவாகும். இஷான் கிஷான் நேற்று 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்தப் பட்டியலில் குருணல் பாண்டியா 26 பந்துகளில் அரைசதம் கடந்து முதல் இடத்தில் உள்ளார். 

  • இந்தியா சார்பில் விக்கெட் கீப்பராக அறிமுக போட்டியில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு முன்பாக  அறிமுக ஒருநாள் போட்டியில்சபா கரீம் தன்னுடைய அறிமுக போட்டியில் 55 ரன்கள் எடுத்திருந்தார். அதை நேற்று இஷான் கிஷன் 59 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார்.

  • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக போட்டியில் முதல் பந்தில் சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் படைத்துள்ளார். 


இவ்வாறு நேற்று இஷான் கிஷன் பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: என்னா அடி..! இதுதான் இமாலய சிக்ஸரா? - வைரலாகும் லிவிங்ஸ்டோன் சிக்ஸ் வீடியோ!