"நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்தி உண்மை இல்லை" என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலில் பந்துவீச்சாளார் புவனேஷ்வர் குமாரின் பெயர் இடம் பெறவில்லை.



கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல் ராகுல், சஹா ஆகிய இருவரும் உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும். சப்ஸ்டியூட் வீரர்களாக அபிமென்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மாட்டுகளிலும் விளையாட நான் என்போதும் தயாராகவே உள்ளேன். “தவறான தகவல்களை” வைத்து எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பமில்லை போன்ற செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பதிவில் புவனேஷ்குமார் தெரிவித்துள்ளார்.






இதுவரை, இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், மொத்தம் 63 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து அடிக்கடி காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.


இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவும் புவனேஷ்வரின் பெயர் இடம் பெறாததால் அவர் ஓய்வு பெற உள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை புவனேஷ் குமார் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.