தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கத்தினால் தினசரி 280க்கும் அதிகமான நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மேலும், தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


புதியதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், உயரதிகாரிகளுடனும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் மாநிலம் முழுவதும் நேற்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதன்படி, நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டார்.




இன்று கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அதிகாரிகளுடன் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-


கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறைந்த அளவு ஆக்சிஜனைப் பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளித்து நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றன. ஆம்புலன்சுகளில் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பும் வகையில், 15 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர், 2 ஆயிரம் மருத்துவர், 6 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் என 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை கூடுதலாக பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, கோவை இ.எஸ்.ஐ. மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கயைில் பிரித்து அனுப்பப்படுவார்கள்.


மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது, அந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை முழுமையாக கிடைக்கத் தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்து கண்காணிப்போம். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.“


இவ்வாறு அவர் கூறினார்.




தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் பணியாற்றுவதற்காக தேர்வு எழுதாமல் காத்திருக்கும் மாணவர்கள் ஆகியோரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்கனவே அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார். இந்த சூழலில், தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


சமீபத்தில் அதிக அளவில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததும் பரவலாக பேசப்பட்டது.