கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.


கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் திரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர். அதேபோல மாணவ, மாணவிகள் தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி, மற்றவர்கள் நிதியுதவி அளிக்க தூண்டுகோலாக இருந்து வருகின்றனர். கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கியுள்ளார்.




கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலமுரளி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 17 வயது மகள் சுமரேகா காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெற்றோர்கள்அவ்வப்போது கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சி செய்திகளில் சுமரேகா பார்த்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை அளிக்க வேண்டுமென்ற முனைப்பில், உண்டியலில் சேமித்த பணத்தை கொடுக்க முன் வந்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சுமரேகா 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழங்கினார்.




இதுகுறித்து சுமரேகாவின் தாயார் ரேணுகா கூறுகையில், “ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பது சுமரேகாவிற்கு சிறிய வயதில் இருந்து கனவாக இருந்து வருகிறது. தனது உயர்கல்விக்காக சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, நாங்கள் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். நிவாரண நிதி வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். கொரோனாவால் ஒரு உயிரைக் கூட இழக்கக்கூடாது என முதலமைச்சர் கூறியது சுமரேகா மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்  தனது சேமிப்பு பணத்தை வழங்க எங்களிடம் விருப்பம் தெரிவித்தார். அதன்பேரில் இன்று அமைச்சர்களிடம் நிதியுதவி அளித்தோம்” என அவர் தெரிவித்தார்.


முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்க விரும்புவோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை கிளை, AlcNo. 117201000000070, IFSC-IOBA0001172 என்ற முகவரியில் செலுத்தலாம்.