நீச்சல் வீரராக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஸ்ரீராமின் தாய் குறித்து "Beyond limits" என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவருவதன்மூலம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும். இயற்கையின் பிழையால் உடல் சோர்வு கொண்ட அவர்களை சாதனையாளர்களாக வளர்த்தெடுத்து அவர்களின் வாழ்வில் மன மகிழ்ச்சியையும் மறு வாழ்வையும் அளிக்க முடியும் என்பது சாதனையாகி போயுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிறக்கும்போதே 85 சதவீதம் மூளை வளர்ச்சி இல்லாமலும் 90 சதவீதம் உடல் செயல்பாடும் இல்லாமல் இருந்தார். இடுப்புக்கு கீழே செயல்பாடு இல்லாமல் இருந்ததால் அவரால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். அதன்பின்னர், சிறுவயது முதலே, யோகா, நீச்சல் பயிற்சி செய்துவந்ததால் இப்போது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு மாற்றியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் மற்றவர்களை போல நம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் கோபமும் இருப்பது வாடிக்கைதான். அந்த எதிர்மறை எண்ணங்களை யோகா போன்ற பயிற்சிகள் தணிப்பதாக கூறுகிறார் ஸ்ரீராமின் தாயார் வனிதா.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நம்பள மதிக்கவில்லை; ஏளனமாக பாக்கிறார்கள் என்ற ஏக்கம் எப்போதுமே அவர்களிடம் இருக்கும். ஆனால் யோகா, நீச்சல் பயிற்சி போன்றவை அவர்களை சமாதனப்படுத்தி அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது.
நீச்சல் பயிற்சி அவனுடைய மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. அவனுடைய 5 வயதில் கால் வலுப்பெற வேண்டும் என்று நீச்சல் பயிற்சியை ஆரம்பித்தோம். நீச்சல் கற்ற பிறகு முதன் முதலில் மாவட்ட அளவில் பங்கேற்றான். அப்போது கலந்து கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்தது. அதைப்பார்த்தே அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.
நான் வெற்றி பெற்றேன். பரிசு வாங்குனேன் என்று சொல்லிக்கொண்டு பெருமை பட்டான். எனவே நாங்களும் அதை நோக்கியே பயணித்தோம். அது அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது” எனத் தெரிவித்தார்.
நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் கடலில் ஸ்ரீராம் 5 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார். அவரின் தொடர் முயற்சியின் பலனாக 2018 ஆம் ஆண்டு சிறந்த இளைஞருக்கன முன்மாதிரி விருது இந்திய குடியரசுத்தலைவர் கையால் கிடைக்கப்பெற்றது.
ஸ்ரீராமின் திறன்சார் பயிற்சி ஆசிரியர் தமிழ்செல்வி கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்காக யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்காக நான்கு விதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அவர்களின் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்தெடுப்பதே எங்கள் கடமை” எனத் தெரிவித்தார்.
அவரைப்போலவே பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் சாதனைகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்து வருகிறது திமான் அறக்கட்டளை.
இந்நிலையில், நீச்சல் வீரராக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஸ்ரீராமின் தாய் குறித்து "Beyond limits" என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.