மாநாடு படம் சிம்புவின் கெரியரில் மட்டுமல்லாது, வெங்கட் பிரபுவின் கெரியரிலும் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படம் வெளியாகியிருந்தாலும் படக்குழுவினரை வியக்க வைக்கும் அளவிற்கான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காரில் செல்லும் இயக்குநர் வெங்கட் பிரபுவை கண்ட அவரின் தீவிர ரசிகர் ஒருவர் , அவரை துரத்தி சென்று செல்ஃபி எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நுங்கம்பாக்கத்திலிருந்து வெங்கட் பிரபுவை காரின் பின் தொடர்ந்த அந்த இளைஞர், தேனாம்பேட்டை வரையில் சென்று வெங்கட் பிரபுவுடன் செல்ஃபி எடுத்துள்ளார். வெங்கட் பிரபு காரில் அமர்ந்தபடியே போஸ் கொடுக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.






சமீபத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வெங்கட் பிரபு . அப்போது ரசிகர் ஒருவர் மாநாடு 2 உருவாக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி கேட்க , அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு , நிச்சயமாக மாநாடு 2 எடுப்பதற்கான திட்டம் இருக்கிறது. அதில்  மாநாடு படத்தில் பிரபலமான டைம் லூப்பை பயன்படுத்தி மங்காத்தா மற்றும் மாநாடு கதாபாத்திரங்களை ஒன்றாக இணைக்கும் திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தற்போது தனக்கான கமிட்மெண்டுகளை முடித்து மீண்டும் மாநாடு 2 படத்திற்கான படப்பிடிப்புகளை துவங்குவாராம் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க , யுவன் சங்கர் ராஜா,இசையமைத்துள்ளார். 'மாநாடு' படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்கி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தில் சிம்பு அப்துல் காதர் என்னும் இஸ்லாமிய இளைஞராக வலம் வருகிறார். தனது நண்பனுக்காக இரத்த தானம் செய்ய முற்படும் பொழுது , சிம்பு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். அப்போது நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும்தான் படத்தின் கதை.படம் முதல் வாரத்தில் 30 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.