ஐரோப்பிய நாடான பெல்ஜியம் கால்பந்து அணியின் கேப்டன் ஈடன் ஹஸார்டு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


அவருக்கு வயது 31. கத்தாரில் நடைபெற்றுவரும் 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. குரூப் எஃப்-இல் இடம்பெற்றிருந்த பெல்ஜியம், குரோஷியாவுடன் டிரா செய்தது. மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.


கனடாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்து பெல்ஜியம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியே.


முன்கள வீரரான ஈடன், 2008-ஆம் ஆண்டில் அணியில் சேர்ந்தார். இதுவரை 33 கோல்களை அடித்துள்ளார். 126 ஆட்டங்களில் அவர் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார். 


கடந்த உலகக் கோப்பைத் தொடரில் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தியது இவரது தலைமையிலான பெல்ஜியம் அணி தான்.


Ind vs Bang, 2nd ODI: கடைசி நேரத்தில் படையெடுத்த மெஹிதி ஹசன் -மஹ்முதுல்லாஹ் ஜோடி.. இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு!


இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எனக்கு அடுத்த அணியை வழிநடத்த வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். நான் எனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறேன். உங்களது ஈடு இணையற்ற ஆதரவுக்காக நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். 2008-ஆம் ஆண்டு முதல் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு எனது நன்றி. உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






செல்சீ கால்பந்து கிளப் அணியில் விளையாடியுள்ள ஈடன், இரு முறை ப்ரீமியர் லீக் மற்றும் ஐரோப்பா லீக் போட்டியில் அணியை வெற்றி பெற செய்ததில் பங்களித்திருக்கிறார். 2019 இல்  ரியல் மாட்ரிட் அணிக்கு இவர் சென்றுவிட்டார்.