ஹெலிகாப்டர் என்றவுடன் தோனி ரசிகர்களுக்கு நிஜமான ஹெலிகாப்டர் நினைவுக்கு வராது. அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் தான் நினைவுக்கு வரும். அதேபோல் தான் நம்பர் 7ம். தோனியின் ஜெர்சி நம்பர் தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். தோனி மீதான இந்த அபிமானத்தையே அடிப்படையாகக் கொண்டு தங்களின் புதிய பீர் வகைக்கு காப்டர் 7 எனப் பெயர்ச் சூட்டி மக்களின் அபிமானத்தையும் வென்றிருக்கிறது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.



 

7Ink Brews என்பதுதான் அந்நிறுவனத்தின் பெயர். இதில் மகேந்திர சிங் தோனியும் ஒரு பங்குதாரர். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆல்கஹால் மற்றும் நான் ஆல்கஹாலிக் பானங்களைத் தயாரிக்கிறது.

மோகித் பாக்சந்தனி, அடில் மிஸ்ட்ரி மற்றும் குனால் படேல் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். பீர் வகைகள் மட்டுமல்ல சாக்கலேட்டுகளையும் இந்த நிறுவனம் தயாரிக்கின்றது.

காப்டர் 7 ஸ்மூத் லகர், காப்டர் 7 பிரீமியம் லகர் என இருவகை பீர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். இப்போதைக்கு இந்த பீர் வகைகள் பெங்களூரு, கோவா, புனே, மும்பை பகுதிகளில் கிடைக்கிறது. தோனி ரசிகர்கள் நிச்சயம் காப்டர் 7ஐ சுவைக்காமல் இருக்க மாட்டார்கள் என மகிழ்ச்சியுடன் ப்ரூவரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், தோனியும் இந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறுகிறார்.

இதுதவிர சாக்கலேட்டுகளையும் உருவாக்குகிறது 7Ink Brews. மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல சாக்கலேட் தயாரிப்பாளர் டேவிட் பெலோவுடன் இணைந்து சாக்கலேட் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

தென் இந்தியாவில் விளைவிக்கப்படும் கொக்கோவா கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரக சாக்கலேட்டுகள் முற்றிலும் ஆர்கானிக், முழுக்க முழுக்க சைவமானது. மொசாம்பி ஜெஸ்ட் (Mosambi Zest), ஸ்ட்ராபெர்ரி, (Strawberry), காப்பி (Coffee), புதினா (mint), மல்பெரி (mulberry) என வெவ்வேறு சுவைகளில் இந்த வகை சாக்கலேட்டுகள் தயாராகின்றன.



 

இந்தியாவின் பீர் தாகம்..

இந்தியாவின் பிரபல பீர் தொழிற்சாலையான யுனைடட் ப்ரூவரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பீர் தொழிற்சாலைகள் பலமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. 2005ம் ஆண்டில் பீர் தொழிற்சாலைகள் 100 மில்லியன் கேஸ் பீர்களை உற்பத்தி செய்தது. அதுவே 2019ம் ஆண்டில் இது 300 மில்லியன் கேஸ்களாக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் பீர் தொழிற்சாலைகள் லாபத்தை நோக்கியே பயணிப்பதாகக் கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள்.

ஏற்கெனவே கிங்ஃபிஷர், ஹெய்ன்கென், ஆம்ஸ்டெல் பீர் என பல்வேறு சர்வதேச தர பீர் வகைகள் இருக்க தற்போது தல தோனியின்  பங்களிப்போடு காப்டர் 7ம் களத்தில் இறங்கியுள்ளது.