‘யாஸ்’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறார். 


வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே பகானகா அருகில் நேற்று முன்தினம் கரை கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று வீசியதோடும் மட்டுமல்லாமல், கனமழையும் பெய்தது.
 
இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இரு மாநிலங்களிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.


மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ், ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தன.




இந்தப் புயலின்  காரணமாக 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், 134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.  
இந்நிலையில்,  ‘யாஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார். அப்போது இரண்டு மாநிலங்களிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்து பார்வையிடுகிறார். ஆய்வுக்கு பின்னர் புயல் பாதிப்பு நிவாரண உதவிகளை பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 சில தினங்களுக்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் குஜராத்தில் கரையை கடந்தது. இந்தப் புயலால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புயல் பாதிப்புகளை பார்வையிட குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஹெலி­காப்­டர் மூலம் புய­லால் பெரும் சேதம் அடைந்த கிர்-சோம்­நாத், பாவ்­ந­கர், அம்­ரேலி, உனா, டையு யூனி­யன் பிர­தே­சம், ஜபா­ரா­பாத், மகுவா உள்­ளிட்ட பகு­தி­க­ளைப் பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். ஆய்வுக்கு பின்னர், புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்குத் தலா ரூ.2 லட்­ச­மும், காயம் அடைந்­தோ­ருக்கு தலா ரூ.50 ஆயி­ர­மும் இழப்­பீ­டாக வழங்கப்படும் என்றார்.


யாஸ் புயலின் தாக்கம் தமிழகத்திலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள் பல இடிந்துள்ளன. அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. அதே போல ராமேஸ்வரத்திலும் வீடுகள் மற்றும் படகுகள் சேதமடைந்துள்ளன. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.