இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. நாளை நடைபெறும் பயிற்சி போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்தச் சூழலில் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. 


இந்நிலையில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மின்னஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுடன் சேர்த்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிய விளையாட்டு மருத்துவம் படித்துள்ள மருத்துவர் பதவிக்கான விண்ணப்பமும் வரவேற்கப்படுகிறது. 


 






இந்த விண்ணப்பங்களில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பம் மட்டும் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பதவிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த இரண்டு நாட்களுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஆகவே அந்த தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வாகி விடுவார் என்று கூறப்படுகிறது. 


மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்கள் கும்ப்ளே அல்லது ராகுல் திராவிட் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யார் விண்ணப்பிக்க உள்ளார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக கும்ப்ளே வரவேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் மற்ற நிர்வாகிகள் ராகுல் திராவிட் தான் அந்த பதவிக்கு சரியானவர் என்று கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தற்போது விண்ணப்பிக்க நேரம் தொடங்கியுள்ளது. அதேசமயம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஜடேஜா டூ மேக்ஸ்வேல் : ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்து வெளுத்து வாங்கிய டாப்-5 வீரர்கள்..