இந்த நீதிமன்றம் பல விசித்தரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது... தமிழ் சினிமா இருக்கும் வரை இந்த வசனம் தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் வசனம் என்று அடித்துச் சொல்லலாம்.
1952ல் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம். சக்சஸ் என்று முதல் வசனத்தைப் பேசியிருப்பார். அவர் திரைவாழ்க்கை முழுவதும் சக்சஸ்ஃபுல்லாகத் தான் இருந்தது.
ஏவிஎம் தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்க கருணாநிதி கதை வசனம் எழுத உருவான திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். முதலில் இந்தப் படத்தில் சிவாஜியை ஹீரோவாகப் போடுவதில் ஏவிஎம் மெய்யப்பன் செட்டியாருக்கு சிறிது தயக்கம் இருந்துள்ளது. காரணம் சிவாஜியின் ஒல்லியான தேகம். பராசக்தி படம் தொடங்கி 2000 அடிவரை படப்பிடிப்பு நடந்த பின்னர் மெய்யப்பன் செட்டியார் சிவாஜியின் உடலைத் தேற்றி எடையைக் கூட்ட வேண்டும் என்றார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சிவாஜி கணேசன் உடலை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்படித்தான் பராசக்தியில் பிரபல பிரம்மாண்ட வசனம் நம்மை வந்து சேர்ந்தது. சிவாஜி கணேசனுடன், எஸ்.எஸ்.ஆர், ஸ்ரீரஞ்சணி, பண்டரி பாய் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்தப் படத்தில், கா கா கா பாடல் மிகவும் பிரபலமானது. அதேபோல் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடலையும் இந்தப் படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தி இருப்பார்கள். படத்தின் கடைசிப் பாட்டில் மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா தோன்றியிருப்பார்கள்.
தமிழகம் மட்டுமல்ல இலங்கையிலும் களைகட்டிய பராசக்தி
பராசக்தி திரைப்படம் குறித்து மதுரையைச் சேர்ந்த திரை ஆர்வலர் கணேசன் கூறியதாவது:
மதுரையில் தங்கம் தியேட்டர் 17.10.1952ல் தான் திறக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கம் என்ற பெருமை பெற்றிருந்த தங்கம் தியேட்டரில் தீபாவளி வெளியீடாக ரிலீஸான முதல் படம் பராசக்தி. திரையரங்கில் அடிக்கப்பட்டிருந்த பெயிண்ட்டின் ஈரம் கூட காய்ந்திருக்காத நிலையில் பராசக்தி ரிலீஸ் ஆனது. அந்தத் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதேபோல், தெற்கு மாசி வீதியில் இருந்த சிடி சினாவில் ஷிஃப்ட் முறையிலேயே 126 நாட்கள் ஓடியது. சென்னையில் பேரகன், அசோக், பாரத் திரையரங்குகளில் வெளியானது. மூன்று திரையரங்குகளிலுமே 100 நாட்களுக்கு மேல் ஓடியது. கோவை முருகன் தியேட்டரில் 120 நாட்கள் ஓடியது. திருச்சி ரெலிங்க்டன் தியேட்டரின் 200 நாட்கள் ஓடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் திரையரங்கில் 200 நாட்களும், கொழும்பு நைலன் திரையரங்கில் ஓடியது. பெங்களூரு கீதா, சூப்பரில் 120 நாட்கள் ஓடியது. 16 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் படம் சென்னை மகாராஜ் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 120 நாட்கள் ஓடியது. இப்படியான பெருமையைக் கொண்டது பராசக்தி திரைப்படம்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படங்களே பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் சமூக கருத்துகளுடன் அணல் பறக்கும் வசனத்துடன் பராசக்தி சக்கைப்போடு போட்டது. அரசியல் ரீதியாக திமுகவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு அவர் கூறினார்.
வசூல் ரீதியாகவும் வசன ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் முத்திரை பதித்தது பராசக்தி. பகுத்தறிவு பேசிய திராவிட சினிமா பராசக்தி என்றென்றும் கொண்டாடப்படும்.