2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் தோல்வியடைந்தது, ஏனினும் தொடரில் இரண்டாவது அணியாக ( runner up ) வந்ததற்கு ஐசிசி பரிசுத்தொகையை பிசிசிஐ-இடம் வழங்கியது. அதனை மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடிய 15 வீராங்கனைகளுக்கு வழங்காமல் பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது. அண்மையில் ஒரு செய்தி நிறுவனம் இதனை வெளியிட சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.


இந்நிலையில் அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய மகளிர் அணி புறப்படும் முன்பாக டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை மற்றும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடிய இந்திய மகளிர் அணிக்கான சம்பள பாக்கி இரண்டையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.


டி 20 உலகக்கோப்பை அணியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரையும் விலைப்பட்டியல் அனுப்புமாறு (invoice) பிசிசிஐ கடந்த மாதம் கேட்டிருந்தது, இந்நிலையில் அதனை அடுத்து ஒவ்வொரு வீரருக்கும் சுமார் 19 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது பிசிசிஐ. இந்திய மகளிர் அணி கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மை காலமாகவே பிசிசிஐ முறையாக சம்பளத்தை வழங்குவதில்லை என்ற புகார்கள் எழுந்து வருவது கவனிக்கத்தக்கது. அண்மையில் ஜம்மு & காஷ்மீர் மாநில அணிக்கு 2019-2020 சீசன் விளையாடியதற்கான சம்பளத்தை தற்போது வரை வழங்கவில்லை என்ற புகாரும் வெளிவந்தது. அந்த அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட இர்ஃபான் பதானுக்கும் சம்பளம் வழங்காதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த நிலைமையா என பலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.