தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது, எனவே இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளும் சாராயகடைகளும் மூடப்பட்டன. 




கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் காமாட்சிபேட்டை, நத்தம், திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வீட்டில் நூதன முறையில் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கேஸ் ஸ்டவ்வில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நூதன முறையில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்




இதைத்தொடர்ந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காமாட்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன், சிவமணிகண்டன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராமன், திருவாமூர் சேர்ந்த வெங்கடேசன், திரிமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இவர்கள் யூடியூபில் வீட்டில் சாராயம் காய்ச்சுவது பற்றி பார்த்து காய்ச்சியதும் தெரியவந்தது. பின்பு யூடியூப் பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 5 பேரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் சாராய வாடை வீசுவதாகவும். இதனால் அந்த பகுதியில் உள்ள சிலருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாகவும் எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் புகைப்பட்டி கிராமத்துக்கு வந்து சாராய வாடை வெளிவந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஏழுமலை(வயது 40) என்பவர் செல்போனில் யூடியூப்பை பார்த்துக்கொண்டே குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். 




மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய குக்கர் மற்றும் அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.