ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா விலகல்:
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தலிபான்கள் அரசு அண்மையில் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் உடன் விளையாட இருந்த ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, அவர்கள் பூங்காக்கள் மற்றும் ஜிம்களை அணுகுவதற்கான அவர்களின் சுதந்திரம் மீதான, தலிபான்களின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆப்கான். வீரர்கள் அதிருப்தி:
இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் கடும் அதிருப்தி மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆஸ்திரேலியாவின் செயல் குழந்தைத்தனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, முஜீப் உர் ரகுமான் மற்றும் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆகியோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
”பிக் பாஸ் லீக்கில் பங்கேற்க மாட்டேன்”
ரஷீத் கான் வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிக்கையில், ”மார்ச் மாதம் எங்களுடன் நடைபெற இருந்த தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனது நாட்டை அடையாளப்படுத்தும் விதமாக நான் விளையாடியதை பெரிய கவுரமாக கருதுகிறேன். தொடர்ந்து நாங்கள் சர்வதேச அரங்கில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். எங்களது இந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் உடன் விளையாடுவது உங்களுக்கு சவுகரியமாக இல்லை என்றால், ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் தொடரில் விளையாடி உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. எனவே, அந்த தொடரில் எதிர்காலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளேன்” என, ரஷீத் கான் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த மற்ற வீரர்களும், பிக்பேஸ் லீக்கில் இருந்து விலகுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.