சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னோட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜன.12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக இந்த விழாவில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






மேலும் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எவரும் பங்கேற்காத நிலையில், அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு என்ற வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது. 


இதற்கிடையே ஜனவரி 9 நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். 


அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.


இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.