14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதனாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே தழுவாத அணியாக இருந்து கெத்து காட்டுகிறது கோலியின் ஆர்சிபி படை. கடந்த சில ஐபிஎல் தொடர்களில் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி மேலே இருப்பதையே பார்க்கவே முடியாது. ஆனால், தற்போது, இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. டெல்லி, பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தபோது, மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்த வந்தார். ஆனால், தற்போது ஆர்சிபி அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை காட்டி மிரட்டி வருகிறார். இவருடன் கூட்டு சேர்ந்து 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் கடந்த போட்டியில் தனது வழக்கமான அதிரடியை காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.




கோலியும், படிக்கலும் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். ஜாமிசன்,சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் நன்றாக பந்துவீசி வருகின்றனர்.  சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தடுமாறியது. ஆனால், ஆர்சிபி இந்த பிட்ச்சில் தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு உகந்தது. இதனை அந்த அணி சரியாக பயன்படுத்திக்கொண்டால், அவர்களின் வெற்றிப் பயணம் இன்றையப் போட்டியிலும் தொடரலாம்.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தாலும், அந்த அணியை அனைவரும் பாராட்டினர். ஏனென்றால், வெற்றியின் விளிம்பில் வந்துதான் தோற்றது. கேப்டன் சஞ்சு சாம்சனின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்கவைத்தது. அதற்கடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி, மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பென் ஸ்டோக்ஸ் சென்றது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்து வருகிறது.  மேலும், பயோ பபுள் முறையால் மன அழுத்தம் ஏற்பட்டு லியாம் லிவிங்ஸ்டோன் நாடு திரும்பியுள்ளார். கடந்த போட்டியில் பட்லர் மட்டுமே சிறப்பாக விளையாடினார். சஞ்சு சாம்சன், மில்லர்,  பராக் உள்ளிட்ட வீரர்கள் இன்றைய போட்டியில் ஆட வேண்டியது அவசியமாகும். கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிகர் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசி, ஆர்சிபி ஹிட்டர்களை அடக்கினால் வெற்றி ராஜஸ்தான் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. 




வெற்றியை தொடரவேண்டும் என்ற வெறியுடன் கோலி தனது படையை பலப்படுத்தி களத்தில் இறங்குவார். அதேபோல், தாங்கள் வலுவாக அணியாக இருந்தாலும்,  தொடர் இரு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மேலே வர வேண்டும் என ராஜஸ்தானும் முனைப்பு காட்டும். இதனால், இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 22 முறை மோதியுள்ளன. இதில், இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.